போராட்டத்தை முன்னெடுத்த வெளிநாட்டு பல்கலைக்கழக பட்டதாரிகள்!
பல்கலைக் கழகமானிய ஆணைக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டம் அல்லது அதற்கு சமமான டிப்ளோமா தகைமைகளைக் கொண்ட 50,000 பட்டதாரிகளை பயிற்சி அளித்து அரச சேவையில் இணைத்துக் கொள்வதற்க்கான ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் கோரப்பட்டு பட்டதாரிகள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
அதன்படி தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகளின் பெயர்ப்பட்டியல் கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டு நியமனக்கடிதங்களும் வழங்கப்பட்டிருந்தன. ஆனாலும் தேர்தல் காரணமாக குறித்த நியமனம் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டிருந்தது.
இதற்கமைய தேர்தலின் பின்னர் ஆகஸ்ட் 17 அன்று பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் இணையதளத்தில் தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகளின் பெயர்பட்டியல் புதிதாக இடப்பட்டிருந்தது. அந்த பட்டியலில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்ற பட்டதாரிகளினது பெயர்கள் நீக்கப் பட்டிருத்தன.
ஆயினும் மார்ச் மாதம் வெளியான பெயர்ப் பட்டியலில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்ற பட்டதாரிகளின் பெயர்கள் இடப்பட்டிருந்ததோடு நியமனக் கடிதங்களும் வழங்கப்பட்டிருந்தது. இதனால் பதிக்கப்பட்ட வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்ற பட்டதாரிகள் தங்களுக்கான நியமனங்களைப் பெற்றுத் தரக் கோரி இன்று காலை 9.30 மணியளவில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து ஜனாதிபதி செயலகத்திற்க்கு கவனயீர்ப்பு பேரணியொன்றை மேற்கொண்டிருந்தனர்.