அமெரிக்காவால் முன்மொழியப்பட்டுள்ள வரியைத் தவிர்க்க அரசாங்கம் நடவடிக்கை

அமெரிக்காவால் முன்மொழியப்பட்டுள்ள வரியைத் தவிர்க்க அரசாங்கம் நடவடிக்கை

அமெரிக்காவினால் முன்மொழியப்பட்டுள்ள 12.5 சதவீத புதிய வர்த்தக வரியைத் தவிர்ப்பதற்காக, தற்போதைய தொழிலாளர் மற்றும் சுங்க நடைமுறைகளை வலுப்படுத்த அரசாங்கம் எதிர்பார்ப்பதாக தொழிலாளர் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 

ரொய்ட்டர்ஸ் (Reuters) செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணலொன்றின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

கட்டாய உழைப்பைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் இறக்குமதிப் பொருட்களைக் கண்டறிவதற்காக, சுங்கப் பரிசோதனை செயல்முறையை மேம்படுத்தவும், சர்வதேச தொழிலாளர் தரநிலைகளை நடைமுறைப்படுத்தவும் இலங்கை நடவடிக்கை எடுக்கும் என்றும் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார். 

அமெரிக்கா இலங்கையின் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையாக இருப்பதுடன், முக்கியமாக ஆடை ஏற்றுமதி மூலம் ஆண்டுதோறும் சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வர்த்தகம் மேற்கொள்ளப்படுகிறது. 

முன்மொழியப்பட்டுள்ள புதிய அமெரிக்க வரி முறையின் கீழ், சுமார் 60 நாடுகளுக்கு 12.5 சதவீதம் வரை வரி விதிக்க முன்மொழியப்பட்டுள்ளதுடன், அந்தப் பட்டியலில் இலங்கையும் உள்வாங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

இந்த வரி விகிதமானது பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானுக்கு முன்மொழியப்பட்டுள்ள 10 சதவீத வரியை விட அதிக மதிப்பாகும். 

இலங்கையின் ஆடைத் தொழில் கடந்த ஆண்டு 5 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருவாயை ஈட்டியுள்ளதுடன், இத்துறையில் சுமார் 3 இலட்சம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். 

கட்டாய உழைப்பு தொடர்பாக அமெரிக்க அதிகாரிகளினால் எழுப்பப்பட்டுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதற்காக, சுங்கப் பரிசோதனை முறைகள் மேம்படுத்தப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். 

அத்துடன், வன்முறை மற்றும் துன்புறுத்தல்கள் அற்ற பணிச்சூழலில் வேலை செய்வதற்கான உரிமையை உறுதிப்படுத்தும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) C190 உடன்படிக்கையை நடைமுறைப்படுத்தவும் இலங்கை நடவடிக்கை எடுக்கும் என்று அவர் கூறினார். 

இது தொடர்பாக அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகத்துடன் (USTR) பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற போதிலும், அதன் அதிகாரிகளைச் சந்திப்பதற்காக தற்போது அமெரிக்காவிற்கு விஜயம் செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

ஜூன் 03ஆம் திகதி, இலங்கை உள்ளிட்ட 60 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீதம் முதல் 12.5 சதவீதம் வரை கூடுதல் இறக்குமதி வரி விதிக்க அமெரிக்க நிர்வாகம் முன்மொழிந்திருந்தது. 

கட்டாய உழைப்பை (Forced Labor) பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதைத் தடுப்பதற்குப் போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படாமை மற்றும் அதன் மூலம் அமெரிக்க வர்த்தக நடவடிக்கைகளுக்கு நியாயமற்ற தாக்கம் ஏற்படுவதைச் சுட்டிக்காட்டி இந்த முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இதற்கமைய, கனடா, மெக்சிகோ, பாகிஸ்தான், பங்களாதேஷ், மலேசியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீத கூடுதல் வரி விதிக்க முன்மொழியப்பட்டுள்ளதுடன், இலங்கை உட்பட மேலும் 45 நாடுகளுக்கு 12.5 சதவீத கூடுதல் வரி விதிக்க முன்மொழியப்பட்டுள்ளது.