ஆரம்பமாகவுள்ளது புதிய அரசியலமைப்பிற்கான பணிகள்!

ஆரம்பமாகவுள்ளது புதிய அரசியலமைப்பிற்கான பணிகள்!

நடைமுறையிலுள்ள அரசியலமைப்புக்குப் பதிலாக புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதற்கான பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாக நீதியமைச்சின் செயலாளர் சட்டத்தரணி பிரியந்த மாயாதுன்னே தெரிவித்துள்ளார்.

நீதியமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்ட சட்டத்தரணி பிரியந்த மாயாதுன்னே இன்றைய தினம் நீதியமைச்சில் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்,

புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்கான ஆணையை மக்கள் அரசாங்கத்திற்கு வழங்கியிருப்பதால் அதற்கான பணிகளை முதற்தரமாக ஆரம்பிப்பதாகக் கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

நீதியமைச்சின் புதிய செயலாளராக என்னை நியமித்த ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் நன்றி கூறுகின்றேன். சௌபாக்கியத்திற்கான இலக்கு என்கிற அரசாங்கத்தின் எண்ணக்கருவுக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆணையை மக்கள் வழங்கியிருக்கின்றனர்.

விசேடமாக புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான எதிர்பார்ப்பும் காணப்படுகின்றது. மிகவும் கௌரவமாக மக்கள் வாழக்கூடிய வகையிலும் அதேபோல தேசிய பாதுகாப்பு உறுதியாகின்ற வகையிலும், நாட்டின் அபிமானம், கௌரவத்திற்கு முதலிடம் கொடுக்கின்ற, மனித உரிமைகளைப் பாதுகாக்கின்ற அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான பொறுப்பினை புதிய நாடாளுமன்றத்திற்கு மக்கள் வழங்கியிருக்கின்றனர்.

அதன்படி நீதியமைச்சின் முதலாவது பணியாக புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவதாகும். மக்கள் எதிர்பார்க்கின்ற புதிய அரசியலமைப்பை உருவாக்குவதே தற்போதைய இலக்காக உள்ளது. அதேபோல நீதிமன்றக் கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்தல், புதிய தொழில்நுட்பங்களை வழங்குதல், சட்டப்பிரிவை பலப்படுத்தல் என்ற பணிகளும் உள்ளன.

அனைத்து அரச நிறுவனங்களுக்கும் பணிகளைத் தொடர முடியாமல் உள்ள பழைமையான சட்டங்களைத் திருத்துவதும் அமைச்சின் பிரதான நோக்கமாகும் எனவும் தெரிவித்தார்.