உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வெளிவந்துள்ள மற்றுமொரு விடயம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வெளிவந்துள்ள மற்றுமொரு விடயம்

ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காவல்துறை பிரிவில், முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன இன்று முற்பகல் முன்னிலையாகியுள்ளார்.

வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னிலையாகுமாறு முன்னதாக விடுக்கப்பட்டிருந்த அறிவுறுத்தலுக்கு அமைய, அவர் குறித்த காவல்துறை பிரிவில் முன்னிலையானதாக எமது செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை, கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பிலான முன்கூட்டிய புலனாய்வு தகவல் ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி கிடைக்கபெற்றதாக கூறப்பட்டாலும், குறித்த தினத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளரால் அவருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்றைய தினம் சாட்சியம் வழங்க முன்னிலையாகியிருந்த அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளரர் நிலந்த ஜயவர்தன இந்த தகவலை ஆணைக்குழுவில் வெளியிட்டுள்ளார்.

தாக்குதல்கள் இடம்பெறுவதற்கு முன்தினம் இரவே அது தொடர்பில் பொறுப்புவாய்ந்த தரப்புக்கு அறிவிக்கப்பட்டதால், ஏப்ரல் 21 தாக்குதலை தடுக்காதமைக்கான காரணம் அரச புலனாய்வு சேவையின் பலவீனம் என குறிப்பிட முடியாது என அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி முற்பகல் 10.40 அளவில் வெளிநாட்டு புலனாய்வு தகவல் வழங்குனரின் வட்ஸ்அப் ஊடாக ஏப்ரல் 21 தாக்குதல் குறித்த முதலாவது முன்னறிவுறுத்தல் கிடைக்கப்பெற்றதாக சாட்சியாளர் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் குறித்த தகவலை பெண் காவல்துறை பரிசோதகர் ஒருவர் ஊடாக அரச புலனாய்வு சேவையின் பிரதி பணிப்பாளர் மற்றும் உதவி பணிப்பாளருக்கு அனுப்பி வைத்து அது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு தாம் உத்தரவிட்டதாக அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன, ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கியுள்ளார்