கடமையை பொறுப்பேற்றவுடன் வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட புதிய திட்டம்

கடமையை பொறுப்பேற்றவுடன் வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட புதிய திட்டம்

வெளிநாட்டில் வேலை செய்யும் இலங்கையர்களுக்கு நன்மை பயக்கும் வகையில் அவர்களது தகவல்கள் அடங்கிய களஞ்சியமொன்றை உருவாக்க தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன தெரிவித்தார்.

பல்வேறு நாடுகளிலும் பணிபுரியும் இலங்கையர்களின் குடும்பங்களுக்கு தேவையான நிவாரணங்களைப் பெற்றுக்கொடுக்கவும் அவர்கள் எதிர்கொள்ள நேரும் பிரச்சினைகள் தொடர்பில் தலையீடுகளை மேற்கொள்ளவும் வசதியாக மேற்படி செயற்றிட்டம் அமையுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கத்தின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மேம்பாடு மற்றும் சந்தை வாய்ப்பு இராஜாங்க அமைச்சராக கடமையை பொறுப்பேற்றுள்ள பிரியங்கர ஜயரத்ன நேற்று அமைச்சில் தமது பொறுப்புக்களை கையேற்றதன்பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பழைமையான வெளிநாட்டு வேலைவாய்ப்பு முறைமைக்கு பதிலாக சிறந்த தொழில்நுட்ப பயிற்சியுடன் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு இலங்கையர்களை அனுப்புவதற்கு சிறந்த செயற்றிட்டம் உருவாக்கப்படும்.

அத்துடன் தற்போது எமது நாட்டவர்கள் பணிகளில் ஈடுபட்டுள்ள நாடுகள் தவிர்ந்த ஏனைய நாடுகளுக்கும் பணியாளர்களை அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.