நல்லூர் திருவிழா: ஆலய தர்மகர்த்தா விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்!
நல்லூர் கந்தசுவாமி கோயில் வருடாந்த மகோற்சம் கடந்த ஜூலை 25ஆம் திகதி தொடங்கி சிறப்பாக நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 23ஆம் திருவிழா நடைபெறுகின்ற நிலையில் அடுத்தடுந்து இடம்பெறவுள்ள பெரும் விழாக்களில் மக்கள் சுகாதார நடைமுறைகளை முழுமையான பின்பற்றுமாறு ஆலய தர்மகத்தாவினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “இத்தனை நாட்களும் திருவிழா சிறப்புற நடைபெற முழுமையான ஒத்துழைப்பை நல்கினீர்கள். அவ்வாறே இனிவரும் நாட்களில் இடம்பெறும் விழாக்களையும் தனி மனித இடைவெளியைப் பேணியும் முகக் கவசம் அணிந்தும் சுகாதார நடைமுறைகளைத் தவறாது பின்பற்றிக் கொள்ளுங்கள்!
நல்லூர் கந்தசுவாமி ஆலய இரதோற்சவ தினமான நாளை அதிகாலை முதல் பிற்பகல் 2 மணிவரை சண்முகப் பெருமானை தாராளமாகத் தரிசிக்க முடியும். எனவே குழந்தைகளையும் வயோதிபர்களையும் ஆலயத்துக்கு அழைத்து வருவதைத் தவிருங்கள். அவர்கள் வீட்டிலிருந்தவாறே எம்பெருமானை தியானத்தில் தரிசனம் செய்து கொள்ளுங்கள்.
ஒரேநேரத்தில் அனைவரும் ஒன்றுகூடாமல் வெவ்வேறு நேரங்களில் கோயிலுக்கு வருகைதந்து சண்முகப் பெருமான் ஆனந்தக் கூத்தன் தரிசனம் கண்டு சௌபாக்கியம் அடைவீர்களாக!
சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நல்லூர் ஆலயப் பணியாளர்களுக்கும் தொண்டர்களுக்கும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குங்கள். நல்லூர் கந்தப்பெருமான் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்” என்று தெரிவித்துள்ளார்.