கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் இன்று வெளியான தகவல்

கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் இன்று வெளியான தகவல்

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த 494 பேர் மீண்டும் நாடு திரும்பியுள்ளனர்.

மத்தள மற்றும் கட்டுநாயக்க விமான நிலையங்களை அவர்கள் நேற்றும், இன்று அதிகாலையும் வந்தடைந்துள்ளதாக எமது செய்தி தொடர்பாளர்கள் தெரிவித்தனர்.

ஐக்கிய அரபு ராச்சியத்தில் இருந்து 34 பேரும், கட்டாரில் இருந்து 22 பேரும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

அத்துடன் ஓமானில் இருந்து 150 பேரும், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 288 பேரும் மத்தள விமான நிலையத்தை வந்தடைந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு திரும்பிய அனைவருக்கும் பீ.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் அவர்கள் அணைவரையும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்பிவைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டில் இதுவரை ஒரு இலட்சத்து 85 ஆயிரத்து 118 பேருக்கு பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கொவிட்19 தொற்றை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது.

நேற்றைய தினத்தில் மாத்திரம் ஆயிரத்து 120 பேருக்கு பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

முப்படையினரின் ஊடாக நடத்தி செல்லப்படும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்து 30 ஆயிரத்து 524 பேர் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்து அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

42 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தொடர்ந்தும் 4 ஆயிரத்து 756 பேர் சிகிச்சை பெற்று வருவதாக கொவிட்19 தொற்றை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் இதனை குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில் நாட்டில் இதுவரையில் 2 ஆயிரத்து 890 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

எனினும் தொற்றுறுதியான 2 ஆயிரத்து 666 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர்.

இதற்கமைய கொவிட்-19 தொற்றுறுதியான 213 பேர் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.