கொரோனா பலியை குறைத்து அசாத்தியமாக செயல்பட்டுள்ளது இந்தியா - அமெரிக்க வாழ் இந்திய டாக்டர் பாராட்டு

கொரோனா பலியை குறைத்து அசாத்தியமாக செயல்பட்டுள்ளது இந்தியா - அமெரிக்க வாழ் இந்திய டாக்டர் பாராட்டு

பாதிப்பில் மோசமான நிலைக்கு சென்றாலும், கொரோனா பலியை குறைத்து இந்தியா அசாத்தியமாக செயல்பட்டுள்ளதாக அமெரிக்க வாழ் இந்திய டாக்டர் பாராட்டு தெரிவித்துள்ளார். கொரோனா பலியை குறைத்து அசாத்தியமாக செயல்பட்டுள்ளது இந்தியா - அமெரிக்க வாழ் இந்திய டாக்டர் பாராட்டு கொரோனா வைரஸ் - கோப்புப்படம் வாஷிங்டன்: கொரோனா வைரஸ் தொற்று இந்தியா முழுவதும் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் கொரோனா தரவு மையம், இந்தியாவில் நேற்று மதிய நிலவரப்படி 1 லட்சத்து 90 ஆயிரத்து 900-க்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது; இதன்மூலம் கொரோனா பாதிப்பு மிக மோசமாக உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 7-வது இடத்துக்கு சென்றுள்ளது என காட்டுகிறது.

அதே நேரத்தில் இந்தியாவில் உயிர்ப்பலிகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று மதிய நிலவரப்படி, 5,411 பேர் பலியாகி உள்ளனர். உலகிலேயே மோசமான பாதிப்பில் முதல் இடத்தில் உள்ள அமெரிக்காதான், உயிர்ப்பலியிலும் முதல் இடத்தில் உள்ளது. 17 லட்சத்து 90 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று உள்ள அந்த நாட்டில், உயிர்ப்பலி என்பது 1 லட்சத்து 4 ஆயிரத்தை தாண்டிச்சென்று கொண்டிருக்கிறது. இந்தியாவில் உயிர்ப்பலியை கட்டுக்குள் வைத்திருப்பது பற்றி அமெரிக்காவில் டென்னிசி மாகாணத்தில் வாழும் இந்திய வம்சாவளி மருத்துவ நிபுணரும், அமெரிக்காவிலும், இந்தியாவிலும் உள்ள பல பல்கலைக்கழகங்களில் மருத்துவம் மற்றும் சுகாதார பேராசிரியராகவும் இருந்த டாக்டர் இந்திரனில் பாசு ரே ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறி இருப்பதாவது:- டாக்டர் இந்திரனில் பாசு ரே இந்தியாவில் முன்கூட்டியே ஊரடங்கு பிறப்பித்து, மரணம் தடுக்கப்பட்டுள்ளது. இதை கொலம்பியா பல்கலைக்கழகம் ஒரு ஆய்வில் சுட்டிக்காட்டி உள்ளது. இந்த வகையில் நரேந்திர மோடியின் அரசு ஒரு அசாத்தியமான பணியை செய்துள்ளது. இந்த ஆய்வு, நியுயார்க்கில் ஊரடங்கு 2 வாரங்களுக்கு முன்பாக பிறப்பித்திருந்தால்கூட மார்ச் 3-ந் தேதி 65 ஆயிரம் பேர் பலியாகி இருந்ததை 50 ஆயிரம் அளவுக்கு குறைத்து இருக்க முடியும் என காட்டியது. இந்தியாவில் ஊரடங்கு முதலில் மார்ச் மாதம் 25-ந் தேதி அமலானது. இது 21 நாட்களுக்கானது. இரண்டாவது ஊரடங்கு ஏப்ரல் 15-ந் தேதி தொடங்கியது. அது மே மாதம் 3-ந் தேதி வரை நீடித்தது.

3-வது ஊரடங்கு மே 17-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. 4-வது ஊரடங்கு மே 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. மார்ச் 24-ந் தேதி வரையில் இந்தியாவில் 512 பேர்தான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்தியாவைப் பொறுத்தமட்டில் எனது கருத்து, ‘ஹாட்ஸ்பாட் (தீவிர பரவல்) இல்லாத இடங்களிலும் மெதுவாக திறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எதையெல்லாம் திறப்பது என்பதை பல்வேறு காரணிகளை அடிப்படையாக கொண்டுதான் முடிவு செய்ய வேண்டும். மெதுவாக படிப்படியாக மாற்றங்களை செய்ய வேண்டும். கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊரடங்கு வரும் 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 8-ந் தேதியில் இருந்து தளர்வுகள் படிப்படியாக அமலுக்கு வருகின்றன. ‘ஹாட்ஸ்பாட்’ (தீவிர பரவல்) பகுதிகள் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கின்கீழ் இருக்க வேண்டும். அதே நேரத்தில் அங்கு பரிசோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும். தனிமைப்படுத்தலும் வேகமாக நடைபெற வேண்டும்.

இது கட்டாயமானதாகும். நமது நாட்டில் 80 சதவீதத்துக்கும் அதிகமான தொற்று பாதிப்பு என்பது மராட்டியம், தமிழ்நாடு, டெல்லி, குஜராத், மத்திய பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில் உள்ளது. அதிலும் 60 சதவீதத்துக்கு மேலான பாதிப்பு என்பது மும்பை, டெல்லி, ஆமதாபாத் உள்ளிட்ட 5 நகரங்களில் மட்டுமே இருக்கிறது. இந்த தீவிர பரவல் பகுதிகளில், குறைந்தபட்சம் பகுதி ஊரடங்காவது அமலில் இருக்க வேண்டும். தனி மனித இடைவெளிகளை பின்பற்றுவதை கட்டாயம் ஆக்க வேண்டும். பெரிய அளவில் பரவலை தடுக்க வேண்டும். வயதானவர்கள், நோயுற்றவர்கள் பலியாவதை தடுக்க வேண்டும். விஞ்ஞான வழிகாட்டுதல்களை பின்பற்றுவது அவசியம். அதே நேரத்தில் நிதி பேரழிவை தணிப்பதற்கு பொருளாதார நடவடிக்கைகளை திறக்க வேண்டும். இந்தியாவை பொறுத்தமட்டில் இன்னும் கோடிக்கணக்கானோர் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள நாடுதான். தினமும் சம்பாதித்துத்தான் 2 வேளை உணவையாவது குடும்பத்தினருக்கும், குழந்தைகளுக்கும் பெற்றுத்தர வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். கொரோனா வைரசை பொறுத்தமட்டில் எங்களுக்கு தெரிந்தவரை அது பெரிய அளவில் மாறிவிட்டது. கொரோனா வைரஸ் புதிய தொற்றுநோய் என்பதால் இந்த நோயைப் பற்றி அதிகம் தெரியவில்லை.