50,000 பட்டதாரிகள், 100,000 இளைஞர்கள் நியமனங்கள் செப்ரெம்பர் முதலாம் திகதி நடைமுறைக்கு
50 ஆயிரம் பட்டதாரிகளை அரச சேவைக்குள் இணைத்தல், வருமானம் குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டம் செப்ரெம்பர் முதலாம் திகதி நடைமுறைக்கு வருகிறது.இந்த தகவலை ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் சௌபாக்கியத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக வறுமை இல்லாத இலங்கையை உருவாக்குதல் என்ற குறிக்கோளை அடையும் நோக்கத்துடன் குறைந்த வருமானத்தைப் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த கல்வி பொது தராதர சாதாரண தரத்திலும் பார்க்க குறைந்த கல்வி தரத்தைக் கொண்ட ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.
பலநோக்கு அபிவிருத்தித் திணைக்களத்தின் மூலம் தொழில்வாய்ப்பைப் பெறவுள்ளளோருக்கு 6 மாத தொழில் பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதற்கான நேர்முகத் தேர்வு நடைபெற்று முடிந்தது.அவர்களுக்கான பயிற்சிகள் வரும் செப்ரெம்பர் முதலாம் திகதி ஆரம்பமாகும் என்று ஜனாதிபதி செயலகம் குறிப்பிட்டுள்ளது.இதேவேளை, 50 ஆயிரம் பட்டதாரி அரச சேவைக்குள் இணைக்கும் திட்டத்தில் அவர்களுக்கான பயிலுனர் நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களுக்கான நியமனம் செப்ரெம்பர் முதலாம் திகதி நடைமுறைக்கு வருவதாக ஜனாதிபதி செயலகம் இன்று அறிவித்துள்ளது.