சுற்றிவளைப்பு - 56 பேர் கைது - மதுவரித் திணைக்களம் அறிவிப்பு

சுற்றிவளைப்பு - 56 பேர் கைது - மதுவரித் திணைக்களம் அறிவிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்ட விரோத போதைப் பொருள் பாவனையினை தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 56 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தேர்தல் காலத்தினையொட்டி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் விசேட பணிப்புரைக்கு அமைவாக நாடளாவிய ரீதியில் மதுவரித் திணைக்களம் இந்த நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றது.

இதன்கீழ் கடந்த இரண்டு வாரங்களாக மதுவரித் திணைக்களத்தின் அத்தியட்சகர் எச்.எச்.டி. ஜயரத்னவின் வழிகாட்டலின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட மதுவரித் திணைக்கள பொறுப்பதிகாரி எஸ். ரஞ்சனின் தலைமையிலான மதுவரித் திணைக்கள உத்தியோகத்தர்கள் இந்த சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தனர்.

வாகரை, வாழைச்சேனை, கிரான், களுவாஞ்சிகுடி, வெல்லாவெளி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது இந்த 56 பேரும் கைது செய்யப்பட்டனர்.

சட்ட விரோத வடிசாராயம் உற்பத்தி செய்தமை, வடிசாராய உற்பத்திக்கான உபகரணங்கள், கோடா வைத்திருந்தமை, சட்ட விரோத கள்ளு விற்பனை, கசிப்பு விற்பனை, சட்ட விரோத மதுபான விற்பனை, சட்ட விரோத வெளிநாட்டு மதுபான விற்பனை ஆகியனவற்றின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டனர்து.

நேற்று இரு இடங்கள் சுற்றிவளைக்கப்பட்டு சட்ட விரோத கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகையிடப்பட்டதாகவும் மட்டக்களப்பு மாவட்ட மதுவரித் திணைக்கள பொறுப்பதிகாரி எஸ். ரஞ்சன் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக அந்தந்த பகுதிகளில் உள்ள நீதிமன்றங்கள் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கசிப்பு உற்பத்திக்கான பெருமளவு உபகரணங்களும் கோடாக்களும் மீட்கப்பட்டதுடன் சட்ட விரோத மதுபானங்களும் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.