முழங்காவில் தனிமைப்படுத்தல் மையத்திலிருந்த மூவருக்கு கொரோனா தொற்று!

முழங்காவில் தனிமைப்படுத்தல் மையத்திலிருந்த மூவருக்கு கொரோனா தொற்று!

யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் முழங்காவில் தனிமைப்படுத்தல் மையத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) 120 பேருக்கான பரிசோதனைகள்  மேற்கொள்ளப்பட்ட நிலையில் மூவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

போதனா வைத்தியசாலை விடுதிகளில் அனுமதிக்கப்பட்ட இருவர், போதனா வைத்தியசாலை வெளி நோயாளர் பிரிவில் பரிசோதிக்கப்பட்ட 14 பேர், முழங்காவில் தனிமைப்படுத்தல் மையத்தில் இருந்து 98 பேர், வல்வெட்டித்துறை ஆதார வைத்தியசாலையில் இருந்து 3 பேர் மற்றும் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் இருந்து 3 பேர் என மொத்தம் 120 பேருக்கு கொரோனா பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மூவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன் நாட்டில் தொற்று கண்டறியப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை இரண்டாயிரத்து 885ஆக அதிகரித்துள்ளது.

 தொற்று கண்டறியப்பட்ட மூவரும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கொரோனா தொற்றில் இருந்து 12 பேர் குணமடைந்து இன்று வெளியேறியுள்ள நிலையில் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்து 658 ஆகக் காணப்படுகின்றது.

இந்நிலையில், மேலும் 217 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதுடன் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.