செஞ்சோலையில் கொல்லப்பட்ட மாணவிகளின் நினைவு நாள்: பல்வேறு தரப்பினரால் அனுஷ்டிப்பு

செஞ்சோலையில் கொல்லப்பட்ட மாணவிகளின் நினைவு நாள்: பல்வேறு தரப்பினரால் அனுஷ்டிப்பு

முல்லைத்தீவு, வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்தில் விமானப் படையின் தாக்குதலில் கொல்லப்பட்ட மாணவிகளின் 14ஆவது ஆண்டு நினைவு நிகழ்வுகள் இன்று இராணுவ கெடுபிடிகளுக்கு மத்தியில் பல்வேறு நிகழ்வுகளாக இடம்பெற்றிருந்தன.

சம்பவம் இடம்பெற்ற செஞ்சோலை வளாகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6.54 மணியளவில் வெவ்வேறு குழுக்களாக மலரஞ்சலி செலுத்தி தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தது.

வழமையாக இந்நிகழ்வை ஏற்பாடுசெய்கின்ற வள்ளிபுனம் நினைவேந்தல் குழுவின் உறுப்பினர்களான ரூபன் மற்றும் ஈசன் ஆகியாரின் பங்குபற்றலில் ஒரு நிகழ்வு காலை 6.45 மணிக்கு செஞ்சோலை வளாகத்திலேயே இடம்பெற்றிருந்தது.

அதேபோன்று, புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் குகன் தலைமையில் செஞ்சோலை வளாகத்தில் நினைவுகூரல் இடம்பெற்றிருந்தது.

அத்துடன்,  நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனும் குறித்த செஞ்சோலை வளாகத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார். இவர்கள் இராணுவ கெடுபிடிகளுக்கு மத்தியில் இரகசியமாக அஞ்சலி நிகழ்வை முன்னெடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.