வங்கக்கடலில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் சூறாவளியாக மாற வாய்ப்பு!

வங்கக்கடலில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் சூறாவளியாக மாற வாய்ப்பு!

தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (Deep Depression) வலுவடைந்துள்ளதுடன், அது இன்று (1) மேலும் வலுப்பெற்று சூறாவளியாக மாறக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


இருப்பினும், இதனால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு மிகக் குறைந்த மட்டத்திலேயே காணப்படும் என கடமைநேர வானிலை அதிகாரி மலீத் பெர்னாண்டோ தெரிவித்தார்.


இந்தத் தொகுதி இந்தியாவின் விசாகப்பட்டினம் கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து வருவதாகவும், இது இலங்கையை நோக்கி நகர்வதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்பதால் நாட்டின் உட்புற வானிலையில் இதன் தாக்கம் மிகக் குறைவாகவே இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.


அதேநேரம், இலங்கைக்கு நேரடிப் பாதிப்பு இல்லை என்றபோதிலும், வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளில் கடற்றொழில் மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் இது குறித்து விசேட அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


மறு அறிவித்தல் வரும் வரை அந்த ஆழ்கடல் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும் கடற்றொழிலாளர்களுக்கு  ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.


இதனிடையே நாட்டில் தற்போது நிலவும் வானிலை சாதாரண இடைக்கால பருவக்காற்று (Inter-monsoon) பண்புகளையே காட்டுகின்றது எனத் தெரிவித்த வானிலை அதிகாரி மலீத் பெர்னாண்டோ, பகல் வேளையில் காற்றின் வேகம் குறைவாக இருப்பதாலும், வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதாலும் உடலால் உணரப்படும் வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என்றார்.


இந்த நிலைமை அடுத்துவரும் சில நாட்களுக்கும் நீடிக்கக்கூடும்.

 

இதற்கமைய, மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் ஒரு மணிக்குக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

 

குறிப்பாகக் கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் பகல் வேளையில் உணரப்படும் வெப்பநிலை உயர்வாக இருக்கும் என்பதால் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

 

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

அத்துடன், நாட்டைச் சூழவுள்ள கடற்பகுதிகள் குறித்து கருத்துத் தெரிவித்த அவர், புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும், அங்கிருந்து மட்டக்களப்பு வரையான கடற்பகுதிகளிலும் ஆங்காங்கே மழை பெய்யக்கூடும் என்றார்.


நாட்டைச் சூழவுள்ள கடற்பகுதிகளில் காற்று குறிப்பிட்ட திசையின்றி வீசக்கூடும் என்பதுடன், காற்றின் வேகம் மணிக்கு 25 முதல் 35 கிலோமீற்றர் வரை காணப்படும். இதனால் கடற்பகுதிகள் ஓரளவுக்குக் கொந்தளிப்பாகக் காணப்படும் என்றும் வானிலை அதிகாரி மேலும் தெரிவித்தார்.