அனைத்து ஊடகவியலாளர்களினதும் பிரச்சினைகள் தீர்க்கப்படும் – வியாழேந்திரன் உறுதி!

அனைத்து ஊடகவியலாளர்களினதும் பிரச்சினைகள் தீர்க்கப்படும் – வியாழேந்திரன் உறுதி!

ஊடகங்கள் மற்றும் ஊடகத்துறை சார்ந்துள்ள அனைவருக்கும் உள்ள தேவைகளை இனங்கண்டு நிறைவேற்றுவதோடு அவர்களுடைய பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பதே எமது முக்கிய நோக்காகும் என்று தபால் சேவைகள் மற்றும் வெகுசன ஊடக தொழில் அபிவிருத்தி  இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “தமிழ் ஊடகங்களை பொறுத்தவரையில் கட்டாயமாக நாட்டை சுபீட்சத்தை நோக்கி முன்னெடுத்தல் என்ற ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு பொறுப்புக்கள் நிறைவேற்றும் தேவைப்பாடு உள்ளது. ஊடகத்துறை சார்ந்து ஊடகங்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் அங்கு பணிபுரிகின்றவர்களுக்கும் உள்ள பிரச்சினைகளை தீர்த்துக்கொடுப்பது மட்டுமன்றி அவர்களுடைய தேவைகளை அறிந்து அந்த தேவைகளை நிறைவேற்றுவதும் எமது முக்கிய நோக்காக உள்ளது.

நாட்டில் ஊடகத்துறையை ஒரு சுதந்திரமான காத்திரமான துறையாக கட்டியெழுப்பவேண்டும் என்பதே ஜனாதிபதி, பிரதமர் மற்றும் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ ஆகிய அனைவருடைய எதிர்பார்ப்பாகும். அதேவேளை குறிப்பாக கொழும்பு மாத்திரமன்றி இலங்கை முழுவதிலும் உள்ள ஏனைய ஊடகவியலாளர்களும் வீடு மற்றும் காணி சார்ந்த பிரச்சினைகளையே எதிர்நோக்குகின்றனர்.

இவர்களுடைய இந்த பிரச்சினைகளை தீர்த்துக்கொடுப்பதற்கான வேலைத்திட்டங்களை அமைச்சருடன் கலந்துரையாடி பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்று அதை தீர்த்துக்கொடுப்பதற்கான வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுக்க தயாராக இருப்பதாகவும் அதனை மாவட்ட ரீதியாக முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.