ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகப் போராட்டம் நடத்தத் தடை - கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு!
ஜனாதிபதி செயலக வளாகத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் தங்கியிருப்பதைத் தடுக்கும் நோக்கில், உலபனே சுமங்கல தேரர் உள்ளிட்ட 54 பேருக்கு எதிராக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
காவல்துறை தரப்பினால் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த பின்னர், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 106(1) ஆம் பிரிவின் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட சிறைத்தண்டனைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அவருக்கு விடுதலை வழங்குமாறு கோரியும் பல்வேறு பௌத்த விகாரைகளின் விகாராதிபதிகள், பிக்குகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் அமைப்புகளின் செயற்பாட்டாளர்கள் தொடர்ச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நீதிமன்றின் அதிரடி உத்தரவு
இந்தப் போராட்டங்களில் தொடர்ச்சியாகப் பங்கேற்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ள பிக்குகள், அரசியல்வாதிகள் மற்றும் சிவில் அமைப்புகளின் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட 54 பேருக்கு எதிராகவே நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கட்டுப்பாடுகள்:
- இன்று (ஒக்டோபர் 16) காலை 6 மணி முதல் கோட்டை காவல் பிரிவுக்குட்பட்ட கோட்டை ரயில் நிலையத்திலிருந்து செரமிக் சந்தி, அங்கிருந்து NSA சுற்றுவட்டம், பின்னர் சாரணர் மாவத்தை வழியாக காலி முகத்திடல் சுற்றுவட்டம் வரையிலான காலி வீதியை மறிக்கக்கூடாது.
- நிதி அமைச்சு, இலங்கை மத்திய வங்கி, ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் உள்ள வீதிகளில் அல்லது அதிஉயர் பாதுகாப்பு வலயத்திற்குள் தொடர்ச்சியாகத் தங்கியிருக்கக்கூடாது.
- பொதுச் சொத்துக்கள் மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கக்கூடாது.
கோட்டை காவல் நிலையப் பொறுப்பதிகாரி நீதிமன்றத்தில் முன்வைத்த கோரிக்கைகளையும் சமர்ப்பித்த தகவல்களையும் பரிசீலித்த பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 106(1) ஆம் பிரிவின் கீழ் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவு, குறித்த நபர்கள் மற்றும் அவர்களுடன் இணைந்து செயற்படும் குழுவினருக்கும் பொருந்தும் என நீதிமன்ற ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.