எவ்வகையான சவால்களையும் முறியடிப்போம் – சுகாதார அமைச்சர் நம்பிக்கை

எவ்வகையான சவால்களையும் முறியடிப்போம் – சுகாதார அமைச்சர் நம்பிக்கை

கொரோனா வைரஸ் தொற்று சமூகத்தினுள் பரவுவதை தடுக்க முடிந்ததைப் போன்று எதிர்வரும் காலங்களிலும் எவ்வகையான சவால்கள் ஏற்பட்டாலும் அவற்றை முறியடித்து வெற்றி பெற முடியும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சுகாதார அமைச்சில் இன்று (வியாழக்கிழமை) உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கு கொள்ளைத் திட்டத்திற்கு அமைய நோயாளர்கள் இல்லாத நாட்டை உருவாக்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்.  இதற்கான செயற்பாடுகள் வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

எனது அரசியல் பயணத்தில் 16 வருடங்கள் அமைச்சராக கடமையாற்றியிருக்கின்றேன்.

ஐக்கியத் தேசியக் கட்சிக்கு எம்மீது சிறு குற்றச்சாட்டைக்கூட முன்வைக்க முடியாது. அதேபோன்று எதிர்வரும் காலங்களிலும் மிகச் சிறந்த வகையில் அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும். நாம் மிகவும் தூய்மையான அரசியலில் ஈடுபடுபவர்கள்.

கொரோனா வைரஸ் தீவிரமடைந்த காலப்பகுதியில் நாம் மிகவும் பொறுப்புடன் செயற்பட்டோம். நாம் எதிர்பார்த்ததைப் போன்று தென் ஆசியாவிலும் சில சந்தர்ப்பங்களில் உலகளாவிய ரீதியிலும் முன்னோடியான ஒரு நாடாக இலங்கை திகழும் வகையிலான வேலைத்திட்டங்கள் எம்மால் முன்னெடுக்கப்பட்டன.

இதற்காக ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் வழிகாட்டலில் செயற்பட்டதால் மரணத்திலிருந்து மக்களை பாதுகாக்க முடிந்துள்ளது.

சமூகத்தினுள் கொரோனா பரவல் முற்றாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று அனைத்து சவால்களையும் முறியடித்து எம்மால் வெற்றி பெற முடியும்” என மேலும் தெரிவித்துள்ளார்.