பதுளையில் டித்வாவினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான வீடுகளுக்கு அடிக்கல்

பதுளையில் டித்வாவினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான வீடுகளுக்கு அடிக்கல்

டித்வா' புயலினால் பதுளை மாவட்டத்தில் வீடுகளை இழந்த மற்றும் அதிக ஆபத்தான நிலைமைகளுக்கு முகங்கொடுத்த குடும்பங்களுக்காக புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் இன்று (07) ஆரம்பிக்கப்படவுள்ளன. 

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 50 இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கும் திட்டமும் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. 

பதுளை மாவட்டத்தின் பல பிரதேச செயலகப் பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் இந்த திட்டம் செயற்படுத்தப்படவுள்ளதுடன், இதற்கான காணி வசதிகளை அரசாங்கமே வழங்குவதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 

இதற்கமைய அரசாங்கத்துக்குச் சொந்தமான காணிகளில் கந்தேகெட்டிய, சொரணாத்தொட்ட, ஹாலிஎல, பதுளை, பசறை மற்றும் மீகஹகியுல ஆகிய பிரதேசங்களில் 237 வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. 

இதன் முதற்கட்டமாக இன்று (7) கந்தேகெட்டிய மற்றும் சொரணாத்தோட்ட பிரதேச செயலகப் பிரிவுகளில் 68 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டப்படவுள்ளது 

அதனைத் தொடர்ந்து நாளை மறுதினம் (8) ஹாலிஎல, பதுளை மற்றும் பசறை பிரதேச செயலகப் பிரிவுகளில் 123 வீடுகளுக்கும், 9 ஆம் திகதி மீகஹகியுல பிரதேச செயலகப் பிரிவில் மேலும் 46 வீடுகளுக்குமாக அடிக்கல் நாட்டப்படவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 

பாதுகாப்பு அமைச்சு, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு, பதுளை மாவட்ட செயலகம் மற்றும் தேசிய அனர்த்த நிவாரண சேவை மையம் ஆகியன இணைந்து இந்த வீட்டுத்திட்டப் பணிகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன.