பாமாயில் உடலுக்கு நல்லதா, கெட்டதா? தின்பண்டங்களில் பாமாயில் சேர்க்கப்படுவதன் பின்னணி என்ன?
உணவுப் பொருட்களின் ஆயுளை நீட்டிக்கவும், குறைந்த செலவு மற்றும் அதிக வெப்பநிலையைத் தாங்கும் தன்மைக்காகவும் பிஸ்கட், சிப்ஸ் போன்ற பேக் செய்யப்பட்ட நொறுக்குத் தீனிகளில் பாமாயில் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.
எண்ணெய் பனை மரத்தின் பழங்களில் இருந்து எடுக்கப்படும் பாமாயில் (Palm oil), உலகளாவிய உணவுத் துறையில் மிக அதிகளவில் பயன்படுத்தப்படும் பொருளாகும். அதன் தனித்துவமான பண்புகள் மற்றும் நீண்ட காலம் கெட்டுப்போகாமல் இருக்கும் தன்மை காரணமாக, சிப்ஸ், பிஸ்கட் மற்றும் பேக்கரி உணவுகள் போன்ற பேக் செய்யப்பட்ட உணவுப் பொருட்களில் இது பெருமளவில் சேர்க்கப்படுகிறது.
இந்திய உணவுப் பாதுகாப்பு விதிகளின்படி, பாமாயில் பேக் செய்யப்பட்ட உணவுகளில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட ஒரு தரப்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயாகும். மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட கோடெக்ஸ் அலிமென்டேரியஸ் (Codex Alimentarius) தரநிலைகளின்படி மேற்கொள்ளப்பட்ட அறிவியல் பூர்வ ஆய்வுகளின் அடிப்படையில் பாமாயிலின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் (உணவுப் பொருள் தரநிலைகள் மற்றும் உணவுச் சேர்க்கைகள்) ஒழுங்குமுறைகள் 2011, துணை ஒழுங்குமுறை 2.2-ன் கீழ் இது தரப்படுத்தப்பட்ட சமையல் கொழுப்பாக வகைப்படுத்தப்பட்டுள்ளது என்றும், இது இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டம் 2006-ன் கீழ் கண்காணிக்கப்படுவதாகவும் அவர் விளக்கினார்.
பாமாயில் நுகர்வு ஆரோக்கியமானதா? பாமாயிலை மிகக் குறைந்த அளவில் உட்கொள்ளும்போது மிதமான ஆரோக்கிய நன்மையைத் தரலாம்; ஆனால் இதில் அதிகளவு நிறைவுற்ற கொழுப்பு (Saturated Fat) உள்ளதால், இது கெட்ட கொழுப்பை (Bad Cholesterol) அதிகரிக்கக்கூடும். இது செயற்கை டிரான்ஸ் கொழுப்புகளை (Artificial Trans Fats) விடச் சிறந்தது என்றாலும், ஆலிவ் எண்ணெய் அல்லது கனோலா எண்ணெய் போன்ற திரவ தாவர எண்ணெய்களை விட இதய நலனுக்குக் குறைவான நன்மையையே தருகிறது. ஹார்வர்ட் ஊட்டச்சத்து நிபுணர்களின் கூற்றுப்படி, பாமாயில் அதிக டிரான்ஸ் கொழுப்பு கொண்ட வனஸ்பதி போன்ற கொழுப்புகளுக்கு மாற்றாகவும், வெண்ணெயை விட சிறந்த தேர்வாகவும் இருக்கலாம்; இருப்பினும் இதனை தினசரி நுகர்வில் முதன்மைத் தேர்வாக வைக்க முடியாது. பாமாயிலில் சுமார் 50% நிறைவுற்ற கொழுப்பு (குறிப்பாக பால்மிடிக் அமிலம் - Palmitic Acid) உள்ளது. இதனை அதிகளவில் உட்கொள்வது இரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்தி, வீக்கத்தை உண்டாக்கி, இதய நோய் அபாயத்தை அதிகரிக்கலாம்.
2021 முதல் அனைத்து இறக்குமதி நாடுகளிலும் பாமாயில் இறக்குமதிக்கான செலவு -5.6% குறைந்துள்ளது. சர்வதேச அளவில் பாமாயில் அதிகம் இறக்குமதி செய்யும் முதல் 5 நாடுகள்: இந்தியா, பாகிஸ்தான், சீனா, நெதர்லாந்து மற்றும் அமெரிக்கா. 2025-ம் ஆண்டில், ஆசிய நாடுகள் உலக மொத்தத்தில் கிட்டத்தட்ட 5-ல் மூன்று பங்கு (57.8% அல்லது 28.2 பில்லியன் டாலர்) அளவுக்கு பாமாயிலை இறக்குமதி செய்துள்ளன. ஐரோப்பிய நாடுகள் 17% உடனும், ஆப்பிரிக்க நாடுகள் 16.8% உடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
உணவு தயாரிப்பில் பாமாயில் அதிகம் விரும்பப்படுவது ஏன்? ஆக்ஸிஜனேற்றம் எதிர்க்கும் தன்மை கொண்டதால் எளிதில் கெட்டுப்போகாது. லேசான சுவை கொண்டிருப்பதால் உணவின் அசல் சுவையை மாற்றாது. அதிக மகசூல் மற்றும் குறைந்த உற்பத்திச் செலவு; அறை வெப்ப நிலையில் அரை-திட (Semi-solid) நிலையில் இருப்பதால் பிஸ்கட் மற்றும் கிரீம்களுக்கு மொறுமொறுப்பையும் மென்மையையும் தருகிறது. அதிக வெப்பநிலையிலும் நிலைத்து நிற்பதால், தின்பண்டங்களை எண்ணெயில் பொரிப்பதற்கு (Deep-frying) மிகவும் உகந்தது. இந்தோனேசியா, மலேசியாவில் இருந்து அதிகளவில் கிடைப்பதும் பெரிய அளவிலான உற்பத்திக்கு உதவுகிறது.