பூமி எப்படி உயிரினங்கள் வாழும் இடமாக மாறியது? விண்வெளி ரகசியத்தை உடைத்தது நாசா!

பூமி எப்படி உயிரினங்கள் வாழும் இடமாக மாறியது? விண்வெளி ரகசியத்தை உடைத்தது நாசா!

பூமியில் உயிரினங்கள் டி.என்.ஏ மற்றும் செல்களை உருவாக்குவதற்குத் தேவையான பாஸ்பரஸ், நைட்ரஜன் ஆகிய முக்கிய மூலப்பொருட்கள் பூமிக்கு எப்படி கிடைத்தன என்ற விண்வெளி ரகசியத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

"பூமியில் எப்படி உயிரினங்கள் தோன்றின? மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் உருவாகத் தேவையான மூலப்பொருட்கள் பூமிக்கு எங்கிருந்து கிடைத்தன?" இந்தத் தேடலுக்கு அறிவியல் உலகம் பல ஆண்டுகளாக விடை தேடி வருகிறது. இப்போது, நாசாவின் நிதியுதவியோடு நடத்தப்பட்ட புதிய ஆய்வு, இந்த மர்ம முடிச்சை அவிழ்த்துள்ளது.

இதுவரை விஞ்ஞானிகள் என்ன நினைத்துக் கொண்டிருந்தார்கள் தெரியுமா? பூமியில் உயிர் உருவாகக் காரணமான முக்கியத் தனிமங்கள் விண்வெளியின் மிகத் தூரமான வெளிப் பகுதியிலிருந்து விண்கற்கள் மூலமாகத்தான் பூமிக்கு வந்திருக்கும் என்று நம்பினர். ஆனால், இப்போது அது தவறு என நிரூபணமாகியுள்ளது. உயிரினங்களின் டி.என்.ஏ மற்றும் செல்களுக்கு மிக முக்கியமான பாஸ்பரஸ் மற்றும் நைட்ரஜன் (Nitrogen) ஆகிய 2 தனிமங்களும், சூரிய குடும்பத்தின் உட்பகுதியிலிருந்தே பூமிக்குக் கிடைத்துள்ளன என்று இந்த ஆய்வு கூறுகிறது.

சூரிய குடும்பம் உருவான ஆரம்பக்கால வரலாற்றை தங்களுக்குள் பத்திரமாகப் புதைத்து வைத்துள்ள பல பில்லியன் ஆண்டுகள் பழமையான விண்கற்களை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, சூரியனை சுற்றி சுழன்றுகொண்டிருந்த விண்வெளித் தூசிகளிலிருந்துதான் பூமி உருவானது. இந்தத் தூசியில்தான் உயிர் உருவாக்கத்திற்குத் தேவையான வேதிப்பொருட்கள் (கார்பன், ஹைட்ரஜன், நைட்ரஜன், ஆக்ஸிஜன், பாஸ்பரஸ், சல்பர் - சுருக்கமாக CHNOPS) இருந்தன.

சூரிய குடும்பத்தின் ஆரம்பக்காலத்தில், தூரத்துப் பகுதியில் தான் பாஸ்பரஸ் அதிகமாக இருந்தது. ஆனால், திடீரென சூரியனுக்கு அருகில் இருக்கும் உட்பகுதியில் பாஸ்பரஸ் அதிகரிக்கத் தொடங்கியது. இந்த தலைகீழ் மாற்றத்திற்குப் பின்னால் ஒரு 'மாஸ்' வில்லன் இருக்கிறார். அவர்தான் வியாழன் (Jupiter) கிரகம். வியாழன் கிரகம் விண்வெளியில் மிக வேகமாக, பிரம்மாண்டமாக வளர்ந்தபோது, அதன் அசுர ஈர்ப்பு விசை பெரிய 'தடுப்புச்சுவர்' போலச் செயல்பட்டது. அது வெளிப்பகுதிப் பொருட்கள் உட்பகுதிக்குள்ளே வராமல் தடுத்தது. இதனால், சூரிய குடும்பத்தின் உட்பகுதியில் நைட்ரஜனை விட பாஸ்பரஸ் அதிகமாகச் சேர்ந்தது. இந்த உட்பகுதிப் பாறைகள் ஒன்று சேர்ந்துதான் பின்னாளில் நம் பூமியாக உருவெடுத்தது.

விண்வெளியில் எந்தெந்த வேதிப்பொருட்கள் எங்கு கிடைக்க வேண்டும் என்பதைத் தீர்மானித்ததே வியாழன் கிரகம்தான். ஒருவேளை வியாழன் போன்ற ஒரு பெரிய கிரகம் மட்டும் இல்லையென்றால், பூமி போன்ற உயிர்கள் வாழத் தகுந்த சூழல் உருவாகியிருக்காது. பூமிக்கு உயிர் வாழத் தேவையான அத்தனைப் பொருட்களையும் அண்டவெளியின் தூரத்துத் திசைகள் தரவில்லை; சூரியனுக்குப் பக்கத்திலேயே இருந்த விண்வெளிப் பாறைகள்தான் தந்துள்ளன. இந்தக் கண்டுபிடிப்பு பூமியின் கதையை நமக்கு விளக்குவது மட்டுமின்றி, விண்வெளியில் வேற்றுக்கிரகவாசிகள் வாழக்கூடிய பிற கிரகங்களை தேடும் நமது மனிதகுலத்தின் முயற்சிக்கு ஒரு புதிய டார்ச் லைட்டாக அமைந்துள்ளது.