செவ்வாயை தாக்கிய அசுர சூரிய புயல்: நாசா விண்கலம் கண்டுபிடித்த விசித்திர அறிவியல் புதிர்
செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் இருந்து சுமார் 200 கிலோமீட்டர் உயரத்தில் உள்ள 'அயனோஸ்பியர்' (Ionosphere - மின்னூட்டம் பெற்ற துகள்கள் நிறைந்த பகுதி) என்ற வளிமண்டல அடுக்கில் இந்தத் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது.
பூமிக்கு எப்படி காற்று மண்டலம் இருக்கிறதோ, அதேபோல செவ்வாய் கிரகத்திற்கும் வளிமண்டலம் இருக்கிறது. ஆனால், இப்போது அந்த வளிமண்டலத்திற்குள் விண்வெளி அறிவியலாளர்களையே தலையை பிசைய வைக்கும் விசித்திரமான சம்பவம் நடந்து கொண்டிருக்கிறது. செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்தை ஏதோ மர்ம சக்தி வெளியில் இருந்து பலமாகப் பிழிந்து, சுருக்கி (Squeezed) வருவதாக நாசாவின் ‘மேவன்’ விண்கலம் அதிர்ச்சித் தகவலை அனுப்பியுள்ளது. விண்வெளி வரலாற்றிலேயே, கிரகத்தின் உள் வளிமண்டலப் பகுதிக்குள் இப்படி நிகழ்வு நடப்பதைக் கண்டறிவது இதுவே முதல் முறையாகும்.
விஞ்ஞானிகள் இந்த விசித்திர நிகழ்வுக்கு 'ஸ்வான்-வொல்ஃப் விளைவு' (Zwan–Wolf effect) என்று பெயரிட்டுள்ளனர். அதாவது, காந்த அலைகளுக்கு நடுவே சிக்கிக்கொள்ளும் மின்னூட்டம் பெற்ற துகள்கள் மிக பலமாக அழுத்தப்படுவதுதான் இந்த விளைவு. இதுவரை இந்த விளைவை விஞ்ஞானிகள் கிரகங்களுக்கு வெளியே, விண்வெளியில் மட்டும்தான் பார்த்திருக்கிறார்கள். ஆனால், முதன்முறையாக ஒரு கிரகத்தின் வளிமண்டலத்திற்கு உள்ளேயே இந்த அமுக்கம் நடப்பதை இப்போதுதான் பார்க்கிறார்கள். இது விண்வெளி ஆராய்ச்சியாளர்களைப் பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
செவ்வாய் கிரகத்தின் தரைப்பகுதியில் இருந்து சுமார் 200 கிலோமீட்டர் உயரத்தில் இருக்கும் 'அயனோஸ்பியர்' (Ionosphere) என்ற வளிமண்டல அடுக்கில்தான் இந்த மர்ம அமுக்கம் நடப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கடந்த டிசம்பர் 2023-ல் 'மேவன்' விண்கலம் அனுப்பிய காந்தப்புல தரவுகளில் சில விசித்திரமான 'அலைவுகள்' (Strange Wiggles) இருப்பதை விஞ்ஞானிகள் கவனித்தனர். விண்கலத்தின் கருவிகளில் ஏதேனும் கோளாறா என்று பலமுறை செக் செய்து பார்த்தபோதுதான், அது கருவிகளின் கோளாறு அல்ல... நிஜமாகவே அங்கே ஏதோ ஒரு விசித்திர விளைவு நடக்கிறது என்பதை உறுதி செய்தனர்.
நமது பூமிக்கு இயற்கை கொடுத்த ஒரு பெரிய பாதுகாப்பு அரண் ‘காந்தப்புலம்’ (Global magnetic field). இந்த காந்தப்புலம் இருப்பதால் தான் சூரியனில் இருந்து வரும் ஆபத்தான கதிர்வீச்சுகளும், சூரியக் காற்றும் (Solar wind) நம்மை ஒன்றும் செய்ய முடிவதில்லை. ஆனால், பாவம் செவ்வாய் கிரகம். அதற்கு பூமியைப் போல சொந்தமாகப் பாதுகாப்பு காந்தப்புலம் எதுவும் கிடையாது. இதனால் அண்மையில் விண்வெளியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த சூரியப் புயல் (Solar storm), செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்தை நேரடியாகத் தாக்கியது. அந்தப் புயலின் தாக்கத்தால் தான் இந்த 'ஸ்வான்-வொல்ஃப் விளைவு' ஏற்பட்டு, செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்தை ஒடுக்கி, அதன் கட்டமைப்பையே தலைகீழாக மாற்றி அமைத்துள்ளது.
இந்தக் கண்டுபிடிப்பு செவ்வாய் கிரகத்தின் எதிர்கால ஆராய்ச்சியை முற்றிலும் மாற்றியமைக்கப் போகிறது. செவ்வாய் கிரகம் ஏன் பல கோடி வருடங்களாகத் தனது வளிமண்டலத்தை விண்வெளியில் மெல்ல மெல்ல இழந்து (Losing its atmosphere) மொட்டையாக மாறிக் கொண்டிருக்கிறது என்ற வரலாற்றுப் புதிருக்கு இந்த விளைவு விடையாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். நாம் நினைப்பதை விட சூரியன் விண்வெளியில் உள்ள கிரகங்களை எவ்வளவு விசித்திரமான வழிகளில் எல்லாம் வம்புக்கு இழுக்கிறது என்பதற்கு இந்த ‘ஸ்வான்-வொல்ஃப்’ விளைவே சாட்சி.