இருட்டில் மின்னும் சொர்க்க பறவைகள்: துணையை ஈர்க்க 'லேசர் ஷோ' நடத்தும் விசித்திரம்
சொர்க்கப் பறவைகளிடம் இதுவரை உலகுக்குத் தெரியாத ரகசியத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். புற ஊதா ஒளியில் வைரங்களைப் போல ஜொலிக்கும் இந்தப் பறவைகளின் வியக்கத்தக்க திறன் மற்றும் அதன் பின்னணியில் உள்ள சுவாரசியமான காதல் கதையை பார்ப்போம்.
இயற்கையின் அதிசயப் படைப்பான 'சொர்க்கப் பறவைகள்' (Birds-of-paradise) என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது அவற்றின் கண்களைப் பறிக்கும் வண்ணங்களும், விசித்திரமான நடனங்களும்தான். ஆனால், இப்போது இந்தப் பறவைகளிடம் இதுவரை உலகுக்குத் தெரியாத ரகசியத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அவை புற ஊதா ஒளியில் (Ultraviolet light) மின்னும் அற்புதமானத் திறன் கொண்டவை.
மீன்களின் ஒளிரும் தன்மை குறித்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த விஞ்ஞானிகள், அமெரிக்க இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் இருந்த சொர்க்கப் பறவைகளின் மாதிரிகளை எதிர்பாராத விதமாகப் பரிசோதித்தனர். அப்போது, புற ஊதா ஒளியின் கீழ் அந்தப் பறவைகள் திடீரென வைரங்களைப் போல ஜொலிக்கத் தொடங்கின. ஆய்வு செய்யப்பட்ட 45 இனங்களில் 37 வகை சொர்க்கப் பறவைகள் இப்படி ஒளிரும் தன்மையைப் பெற்றுள்ளன. இவை புற ஊதா ஒளியை உறிஞ்சி, மனிதக் கண்களுக்குப் புலப்படாத ஒருவகை மஞ்சள் - பச்சை நிற ஒளியை உமிழ்கின்றன.
இந்தப் பறவைகள் எதற்காக மின்னுகின்றன? இதற்குப் பின்னணியில் ஒரு சுவாரசியமான காதல் கதை இருக்கிறது. ஆண் பறவைகள் பெண் பறவைகளைக் கவர ஆடும் நடனத்தின்போது, இந்த ஒளிரும் இறகுகள் ஒரு 'லேசர் ஷோ' போலச் செயல்பட்டு பெண் பறவைகளை வெகுவாகக் கவருகின்றன. வியப்பிற்குரிய விஷயமாக, சில பறவைகளின் வாயின் உட்புறத் திசுக்கள் கூட ஒளிர்கின்றன! நடனமாடும்போது வாயை திறந்து காட்டும் சிக்னல்கள் மூலம் இவை பலத்தைக் காட்டுகின்றன. ஆண்டுதோறும் புதிய துணையைத் தேடும் பறவைகள், ஒரே துணையோடு வாழும் பறவைகளை விட அதிகப் பிரகாசமாக மின்னுகின்றன. யார் அதிகப் பிரகாசமோ, அவரே சிறந்த ஜோடி எனப் பெண் பறவைகள் தேர்வு செய்கின்றன.
மனிதர்களாகிய நம்மால் இந்த ஒளியைக் காண முடியாது. ஆனால், பறவைகளின் கண்கள் நம்மை விடப் பல மடங்கு சக்தி வாய்ந்தவை. அவற்றின் கண்களில் உள்ள பிரத்யேக 'ஆயில் டிராப்ஸ்' இந்த ஒளியை இன்னும் துல்லியமாகப் பார்க்க உதவுகின்றன. விஞ்ஞானிகளின் இந்தக் கண்டுபிடிப்பு, இயற்கை இன்னும் எத்தனை ரகசியங்களை நமக்காக ஒளித்து வைத்திருக்கிறது என்பதை உணர்த்துகிறது. சொர்க்கப் பறவைகளின் அழகு நாம் நினைத்ததை விடப் பல மடங்கு பிரகாசமானது.