சுழற்றியடித்த காற்றால் கடலுக்குச் செல்வதைத் தவிர்த்த மீனவர்கள்
புத்தளம் - உடப்பு கிராமத்தில் இன்று அதிகாலை தென்மேல் பருவக்காற்று திடீரென்று வீசியதால் மீனவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்த்துள்ளனர்.
அதிகாலை வழமை போல மீனவர்கள் கடலுக்குச் செல்ல தயாராகிய நிலையில் காற்றின் வேகம் காணப்படவே அவர்கள் மீண்டும் கடலுக்குச் செல்லாது வீடுகளுக்கு திரும்பிச் செல்வதைக் காணக்கூடியதாக இருந்தது.
இதனால் இயந்திரப் படகுகள், தெப்பங்கள், கரைவலைத் தொழிலாளர்களின் இயல்பு நிலை பாதிப்படைந்துள்ளது.
இந்நிலையில் காங்கேசன்துறை தொடக்கம் மன்னார், புத்தளம், கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 - 35 km வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து அல்லது மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.
காலி தொடக்கம் மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 - 45 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்
வடக்கு, கிழக்கு , வடமத்திய, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.