தேசிய பாடசாலை ஆசிரியர்களின் இடமாற்றம் : கல்வி அமைச்சின் அறிவிப்பு
2025ஆம் ஆண்டுக்கான தேசிய பாடசாலை ஆசிரியர்களின் வருடாந்த மற்றும் கட்டாய இடமாற்ற உத்தரவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு (Ministry of Education) அறிவித்துள்ளது.
அத்துடன் இது குறித்த மேன்முறையீடுகளைச் சமர்ப்பிப்பதற்கான வழிமுறைகளையும் அமைச்சு வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.ஜே.எஸ்.எஸ். எதிரிசூரிய விடுத்துள்ள அறிவித்தலில், ஆரம்பப் பிரிவு ஆசிரியர்களுக்கான இடமாற்ற உத்தரவுகள் நேற்று (6) முதல் இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் nstt.moe.gov.lk என்ற இணையத்தளம் ஊடாக தமது இடமாற்ற விபரங்களை அறிந்து கொள்ளலாம்.
வழங்கப்பட்டுள்ள இடமாற்றங்கள் குறித்து ஆட்சேபனை உள்ள ஆசிரியர்கள், அதே இணையத்தளம் வாயிலாக வருடாந்த இடமாற்ற மீளாய்வுக் குழுவிடம் மேன்முறையீடு செய்ய முடியும். இணையவழி மூலம் மேன்முறையீடு செய்வதற்கான இறுதி திகதியாக ஜனவரி 20 ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இணையவழியில் விண்ணப்பித்த பின்னர், அதன் அச்சுப்பிரதியை உரிய ஆவணங்களுடன் எதிர்வரும் ஜனவரி 21ஆம் திகதிக்கு முன்னர் தாம் வேதனம் பெறும் பாடசாலையின் அதிபரிடம் ஒப்படைக்க வேண்டும்.
அதிபர்கள் தமது பரிந்துரைகளை ஜனவரி 22 ஆம் திகதிக்குள் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். அத்துடன், அச்சுப்பிரதிகளை ஜனவரி 27 ஆம் திகதிக்குள் கல்வி அமைச்சின் இடமாற்றக் கிளைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
ஏற்கனவே இடமாற்ற உத்தரவு பெற்று, அதனை நடைமுறைப்படுத்தாத அல்லது காலம் நீடிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு, 2025 ஆம் ஆண்டுக்கான புதிய உத்தரவு வழங்கப்பட்டிருந்தால் அவர்களின் பழைய உத்தரவுகள் செல்லுபடியற்றதாகக் கருதப்படும்.

இதேவேளை, தொழில்நுட்பக் கோளாறுகள் இருப்பின் 011-2075854 என்ற எண்ணிற்கும், இடமாற்றம் தொடர்பான விபரங்களுக்கு 011-2784837 என்ற எண்ணிற்கும் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.