கொழும்பில் கர்ப்பிணி மனைவியுடன் பிரபல உணவகத்திற்கு சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி
கொழும்பிலுள்ள One Galle Face இல் அமைந்துள்ள உணவகத்தில் தண்ணீர் போத்தல் கேட்டபோது செனிடைசர் போத்தல் வழங்கிய குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பணியாளர் ஒருவரை பிணையில் விடுவிக்க கொழும்பு கூடுதல் நீதவான் லஹிரு சில்வா நேற்று உத்தரவிட்டார்.
டி.பி. ரத்னவீர என்ற நபர் கோட்டை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் பணியாளர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

சந்தேக நபரை 200,000 ரூபாய் பிணையில் விடுவிக்க உத்தரவிட்ட நீதவான், வழக்கை அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டார்.முறைப்பாட்டிற்கமைய, முன்னிலையான கோட்டை பொலிஸ் அதிகாரிகள் ஆதாரங்களை முன்வைத்துள்ளனர்.
கடந்த 15 ஆம் திகதி ரத்னவீர என்ற முறைப்பாட்டாளர் தனது கர்ப்பிணி மனைவி, ஒன்றரை வயது குழந்தை மற்றும் அவரது மனைவியின் சகோதரியுடன் இரவு உணவு சாப்பிட உணவகத்திற்குச் சென்றதாக குறிப்பிட்டுள்ளார்.
ரத்னவீர தண்ணீர் போத்தல் கேட்டதாகவும், சந்தேக நபர் தண்ணீர் போத்தலுக்கு பதிலாக செனிடைசர் போத்தலை கொண்டு வந்து கோப்பையில் ஊற்றியதாகவும் ரத்னவீர அதை குடித்துவிட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்த முறைப்பாட்டின் வழக்கறிஞர் புலஸ்தி ரணவீர தெரிவித்துள்ளார்.
இதனால் தனது கட்சிக்காரர் கொள்ளுப்பிட்டியில் உள்ள டர்டன்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியிருந்தது எனவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
சந்தேக நபர் ரத்னவீரவுக்கு வழங்கியதாக கூறப்படும் செனிடைசர் கொண்ட போத்தலை ஆய்விற்காக அரச ஆய்வாளரிடம் அனுப்பியுள்ளதாக கோட்டை பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணையின் முன்னேற்றம் குறித்து பெப்ரவரி 6ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்குமாறு நீதிபதி கோட்டை பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.