யாழ்ப்பாணத்தில் சீரற்ற வானிலையால் மூவர் உயிரிழப்பு
நிலவும் சீரற்ற காலநிலையால் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
11 ஆயிரத்து 193 குடும்பங்களை சேர்ந்த 36 ஆயிரத்து 88 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி. என். சூரிய ராஜா தெரிவித்துள்ளார்.
வெள்ளத்தால் 5 ஆயிரத்து 243 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இவர்கள் 51 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், சீரற்ற காலநிலையால் இருவர் காயமடைந்தனர். இரு வீடுகள் முழுமையாகவும் 256 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, சீரற்ற வானிலையால் யாழ்ப்பாணம், பொன்னாலை கடலில் கடற்றொழிலாளர் ஒருவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொன்னாலை சிறு கடலில் கடற்றொழில் நடவடிக்கைக்காகச் சென்ற நிலையில் காணாமல்போன பொன்னாலையை சேர்ந்த 63 வயதான கடற்றொழிலாளர் ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
