யாழ் - கொழும்பு தொடருந்து பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
தற்போது அதிகரிக்கும் யானை - தொடருந்து மோதல்களினால் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு இடையிலான தொடருந்து சேவைகளை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, மஹவ முதல் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் காங்கேசன்துறை நோக்கிப் பயணிக்கும் சரக்கு மற்றும் எரிபொருள் தாங்கி தொடருந்து சேவைகளை நிறுத்துவதற்கு தொடருந்து திணைக்கள இயந்திர இயக்க பொறியியலாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இன்று (23) நள்ளிரவு முதல் சரக்கு மற்றும் எரிபொருள் தொடருந்து சேவைகள் நிறுத்தப்படும் என அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் சந்தன வியந்துவ தெரிவித்துள்ளார்.
இதற்கு மேலதிகமாக, நாளை (24) இரவு சேவையில் ஈடுபடும் 'இரவு தபால் தொடருந்து' சேவைகளிலிருந்தும் விலக எதிர்பார்ப்பதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து சங்கத்தின் பொதுச் செயலாளர் மேலும் தெரிவிக்கையில், “தற்போது தொடருந்துகளில் யானைகள் மோதுவதால் தொடருந்து சேவைகளுக்கு பெரும் தடை ஏற்பட்டுள்ளது.
மஹவயிலிருந்து திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் காங்கேசன்துறை ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் போது ஏற்படும் யானை - தொடருந்து மோதல்களால் காட்டு யானைகளுக்கும் தொடருந்துகளுக்கும் சேதம் ஏற்படுகிறது.
தொடருந்து இயந்திர சாரதிகளாகிய எங்களால் இதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. தொடருந்தை உடனடியாக நிறுத்துவதற்கான வாய்ப்பு இல்லாததால், இது தொடருந்து சாரதிகளுக்கு பெரும் சிக்கலாக உள்ளது.
எனவே இந்த விபத்துக்களுக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது. காட்டு விலங்குகள் தொடருந்தில் மோதுவதால், எதிர்காலத்தில் இப்பகுதிகள் ஊடாக தொடருந்துகளை இயக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
இது ஒரு பெரிய பிரச்சினையாகும், ஏனெனில் இதனால் தொடருந்து பயணிகள் உரிய நேரத்திற்குப் பயணிக்க முடிவதில்லை என சுட்டிக்காட்டுகின்றனர். எனவே இதற்கு உரிய தீர்வு அவசியம் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.” என தெரிவித்தார்.