பரீட்சைக்கு தோற்றும் மாணவிக்கு தந்தை செய்த மோசமான செயல் ; எரிந்து கருகிய புத்தகங்கள்

பரீட்சைக்கு தோற்றும் மாணவிக்கு தந்தை செய்த மோசமான செயல் ; எரிந்து கருகிய புத்தகங்கள்

உயர்தரப் பரீட்சைக்குத் தயாராகிக் கொண்டிருந்த தனது மகளின் பாடப்புத்தகங்கள் மற்றும் உடைகளை எரித்ததாகக் கூறப்படும் தந்தையை, எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பலாங்கொடை நீதவான் நீதிமன்றம் நேற்று (11) உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபர், பலாங்கொடை சமனலவெவ - சீலகம பகுதியில் தச்சுத் தொழிலில் ஈடுபட்டுவரும் ஒருவரென தெரிவிக்கப்படுகிறது.

பரீட்சைக்கு தோற்றும் மாணவிக்கு தந்தை செய்த மோசமான செயல் ; எரிந்து கருகிய புத்தகங்கள் | Father S Cruel Act Towards Daughter For Exam

குறித்த நபர் கடந்த 9 ஆம் திகதி இரவு, மதுபோதையில் வந்து தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ள நிலையில் அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் வீட்டை விட்டு வெளியேறி உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றுள்ளனர்.

அதன்போது, உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் சந்தேகநபரின் மகள் பரீட்சை அனுமதி அட்டை, சீருடை மற்றும் சில புத்தகங்களை மட்டுமே எடுத்துக்கொண்டு தாயுடன் சென்றதாக  நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சந்தேகநபர் அன்றிரவு வீட்டிற்கு வந்து தீ வைத்ததால், வீட்டின் ஒரு பகுதி எரிந்ததுடன், அந்தச் சிறுமியின் மீதமிருந்த அனைத்துப் புத்தகங்களும், உடைகளும் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஆரம்பத்தில், தனது வீட்டிற்கு வேறு யாரோ தீ வைத்ததாகச் சந்தேகநபர் கூறியபோதிலும், பொலிஸாரின் தொடர் விசாரணையில், தானே தீ வைத்ததை அவர் ஒப்புக்கொண்ட நிலையில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும், வீடு தீக்கிரையாகி, புத்தகங்கள் அனைத்தும் அழிந்தபோதும், அந்தச் சிறுமி மனந்தளராமல் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியிருந்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.