இன்று சுகயீன விடுமுறை போராட்டத்தில் குதிக்கும் தரப்பு - அரசுக்கு எச்சரிக்கை
நாடு பூராகவும் இரண்டு நாட்கள் சுகயீன விடுமுறை போராட்டத்தில் குதிக்க உள்ளதாக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆசிரியர் பணியை உறுதிப்படுத்தி தருமாறு கோரி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சுகயீன விடுமுறை போராட்டத்தினை இன்று (03) திகதி முதல் மேற்கொள்ளவுள்ளனர்.
இலங்கை பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் கணேசன் அனீரன் கையொப்பமிட்டு கல்வி அமைச்சின் (Ministry of education) செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில், தமக்கான ஆசிரியர் நியமனத்தை உறுதிப்படுத்தித்தராமல் கடந்த ஐந்து வருடங்களாக அபிவிருத்தி உத்தியோகத்தர் எனும் நியமனத்தின் ஊடாகவே தாம் கற்பித்தல் நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தவகையில் தமக்கு ஆசிரியர் நியமத்தை வழங்காதமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று 03.11.2025 திகதியும் நாளை 04.11.2025 திகதியும் நாடளாவிய ரீதியில் சுகயீன விடுமுறை போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாகவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கோரிக்கையினை முன்வைத்து கடந்த 01.11.2025 திகதி மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்ததுடன், அதன் தொடர்ச்சியாக சுகயீன விடுமுறை போராட்டத்தினையும் முன்னெடுக்கவுள்ளனர்.
இலங்கை முழுவதும் 16600 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பாடசாலைகளில் இணைக்கப்பட்டு கற்பித்தல் செயற்பாட்டில் ஈடுபட்டு வருவதுடன், இதில் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐந்து கல்வி வலயங்களில் 1400 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.