ஆயுர்வேத மருத்துவ சேவைக்கு நியமிக்கப்படவுள்ள பட்டதாரிகள்

ஆயுர்வேத மருத்துவ சேவைக்கு நியமிக்கப்படவுள்ள பட்டதாரிகள்

சமூக சுகாதார வைத்திய அதிகாரிகள் உட்பட 303 பட்டதாரிகளை இலங்கை ஆயுர்வேத மருத்துவ சேவைக்குள் இணைத்துக்கொள்வதற்கான புதிய நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளன.

உள்நாட்டு ஆயுர்வேத மருத்துவத்துறையை வலுப்படுத்தும் நோக்குடன் நாளை (03) குறித்த நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் (Nalinda Jayatissa) தலைமையில், கொழும்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இந்த நியமனம் வழங்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது.

அத்துடன் 2018 ஆம் ஆண்டுக்குப் பிறகு, உள்நாட்டு ஆயுர்வேத மருத்துவத் துறைக்காக ஒரே நேரத்தில் அதிகளவான வைத்திய அதிகாரிகள் நியமிக்கப்படும் சந்தர்ப்பம் இதுவாகும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.ஆயுர்வேத மருத்துவ சேவைக்கு நியமிக்கப்படவுள்ள பட்டதாரிகள் | 303 New Appointments To Ayurvedic Medical Service

இலங்கையின் ஆயுர்வேத சேவையினை மேம்படுத்துவதற்கும், தரமான நோயாளர் பராமரிப்புச் சேவையை வழங்குவதற்கும், இலங்கை ஆயுர்வேத மருத்துவ சேவையில் உள்ள ஆரம்ப நிலை வைத்திய அதிகாரிப் பதவி வெற்றிடங்களைக் கருத்திற் கொண்டும், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் வழிகாட்டலின் கீழ் இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை ஆயுர்வேத திணைக்களம் முன்னெடுத்துள்ளது.

இந்த புதிய வைத்திய அதிகாரிகள், அமைச்சுக்கள் மற்றும் மாகாண சபைகளின் கீழ் இயங்கும் நிறுவனங்கள், வைத்தியசாலைகள் மற்றும் சில உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு நியமிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.