அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு...! அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
இலங்கையின் மாகாண சபைகள் உட்பட பொதுச் சேவையாளர்களின் சம்பளங்களுக்கான செலவுகள், 2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, குறித்த செலவானது 15.6 சதவீதம் அதிகரித்து 555.1 பில்லியன் ரூபாயாக உயர்ந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டின் அதே காலப்பகுதியில் இந்தச் செலவு 480.3 பில்லியன் ரூபாயாக இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பொது நிர்வாகச் சுற்றறிக்கை இல. 10/2025 இன் படி பொதுச் சேவையாளர்களின் அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்பட்டமையே இந்தச் செலவு அதிகரிப்பிற்கு முக்கிய காரணம் ஆகும் என கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, ஓய்வூதியச் செலவுகளும் 2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 10.8 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தக் காலப்பகுதியில் ஓய்வூதியச் செலவு 208.4 பில்லியன் ரூபாயாக பதிவாகியுள்ள நிலையில் 2024 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இந்தச் செலவு188.1 பில்லியன் ரூபாயாக பதிவாகி இருந்தது.
ஓய்வூதிய கொடுப்பனவுகளில் ஏற்பட்ட அதிகரிப்பு மற்றும் ஓய்வூதியதாரர்களின் எண்ணிக்கை அதிகரித்தமையே இந்தச் செலவு உயர்வுக்குக் காரணமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.