யாழ். கொழும்பு தொடருந்து சேவை - மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
வடக்கிற்கான தொடருந்து சேவை தொடர்பில் தொடருந்து திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
வடக்கு மாகாண தொடருந்து போக்குவரத்து இன்று (29.10.2025) வியாழக்கிழமை தொடக்கம் ஒரு வாரத்துக்கு பகுதியளவில் தடைப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண தொடருந்து தண்டவாளங்களை சீர்செய்யும் நடவடிக்கையும் வடக்கு தொடருந்து மார்க்கத்தைத் தரமுயர்த்தல் செயல்பாடுகளும் இந்த ஒரு வார காலப்பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்தப் பணிகள் முற்பகல் 10.15 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணி வரை முன்னெடுக்கப்படும்.
இதனால் இந்த நேரத்தில் தொடருந்து போக்குவரத்து இடைநிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த வாரம், வடக்குக்கான தொடருந்துகளில் உறங்கும் பெட்டிகளை இணைப்பதற்கு எதிர்பார்க்கவில்லை என போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன (Prasanna Gunasena) தெரிவித்துள்ளார்.

அதற்கு பதிலாக குளிரூட்டப்பட்ட சொகுசு ஆசனங்களுடான பெட்டிகளை இணைக்கவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பிரசன்ன குணசேன குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் சிவஞானம் சிறீதரனின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.