
அதிகரிக்கும் இலங்கையின் வறுமை விகிதம்: உலக வங்கியின் அதிர வைக்கும் அறிக்கை
இலங்கையில் வறுமை விகிதம் கணிசமாக அதிகரித்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி, கடந்த 2024 ஆம் ஆண்டில் வறுமை விகிதம் 24.9 சதவீதமாக அதிகரித்துள்ளதாக உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையின் வறுமை நிலை தொடர்பில் உலக வங்கி நேற்று வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கை மக்கள் வறுமையில் விழும் அபாயம் அதிகமாக இருப்பதாகவும், மேலும் 10 சதவீத மக்கள் வறுமைக் கோட்டிற்கு மிக அருகில் வாழ்வதாகவும் உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவுப் பொருட்களின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்க விநியோக சவால்களை ஏற்படுத்துவதாகவும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் பணக்கார குடும்பங்களை விட மூன்று மடங்கு அதிகமாக உணவுக்காக செலவிடுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் உணவுப் பாதுகாப்பின்மை நாட்டில் அதிகமாகவே உள்ளதாகவும் உலக வங்கி வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
இந்நிலையில், வறுமை விகிதம் 2024 ஆம் ஆண்டில் 24.9 சதவீதத்திலிருந்து இந்த ஆண்டு 22.4 சதவீதமாகக் குறையும் என கணிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.