
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வாக்களிக்கும் உரிமை: அரசின் முக்கிய முடிவு
பல ஆண்டுகளாக நடைபெற்ற பிரசாரங்களுக்குப் பின், வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது குறித்து பொதுநிர்வாகம், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரின் பரிந்துரைப்படி, தொடர்புடைய அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களின் பிரதிநிதிகளை இணைத்து விசேடக் குழுவொன்றை அமைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தக் குழு, தொடர்புடைய சட்டங்களைத் திருத்தவும், புதிய சட்டங்களை உருவாக்கவும் தேவையான விபரங்களை ஆய்வு செய்யும் என தெரிவிக்கப்படுகிறது.
இத்தகவலை அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் போது அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ் நேற்று வெளியிட்டுள்ளார்.
தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் சட்டங்களின்படி, இலங்கையில் வசிக்கும் மற்றும் தேர்தல் பதிவேட்டில் பெயர் பதிவு செய்திருக்கும் குடிமக்களுக்கே வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களுக்கான வாக்குரிமையைப் பாதுகாக்கும் வகையில் எந்த வித சட்டமும் இதுவரை இயற்றப்படவில்லை.
இந்நிலையில், இந்தியா, பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ் போன்ற பல ஆசிய நாடுகள், தமது குடிமக்கள் வெளிநாடுகளில் இருந்தும் வாக்களிக்கச் செய்யும் சட்ட ஏற்பாடுகளை முன்னதாகவே செய்துள்ளன.
எனவே, இலங்கைக்கும் அவ்வாறான சட்ட திருத்தங்கள் செய்யப்படுவது காலத்திற்குத் தேவையான ஒன்றாக கருதப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.