புதிய அரசிலாவது மக்களுக்கு தீர்வு வேண்டும்: தேசிய சக்தி கோரிக்கை

புதிய அரசிலாவது மக்களுக்கு தீர்வு வேண்டும்: தேசிய சக்தி கோரிக்கை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவும் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவும் இனியும் காலம் தாழ்த்தாது மக்களுக்கான சேவைகளை துரிதமாக முன்னெடுக்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தலைமையிலான அரசாங்கம் மக்களிடம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கோரியது. பொதுத் தேர்தலில் மக்கள் அந்த ஆணையை வழங்கியிருக்கின்றனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

நடைபெற்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு சுமார் 4 இலட்சத்து 40 ஆயிரம் வாக்குகள் கிடைக்கப் பெற்றுள்ளன. எமக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம். எனினும் இந்த பெருபேற்றினைக் கொண்டு திருப்தியடைய முடியாது.

ஜனாதிபதித் தேர்தலுடன் ஒப்பிடுகையில் வாக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும் 2015 ஆண்டை விட இம்முறை உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.

புதிய அரசாங்கம் ஆட்சி பொறுப்பேற்று 9 மாதங்கள் நிறைவடைந்துள்ளன. இந்த ஒன்பது மாதங்களிலும் ஓய்வூதியப் பிரச்சினை, வேலை வாய்ப்பினை வழங்குதல், மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்கான வேலைத்திட்டங்கள் என்பவற்றை முன்னெடுப்பதற்கு தமக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் அவசியமாகும் என்று அரசாங்கம் கூறியது. அதனை ஏற்று மக்கள் தற்போது அரசாங்கத்திற்கு அந்த ஆணையை வழங்கியுள்ளனர்.

எனவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ ஆகியோர் இனிவரும் காலங்களிலும் காரணங்களைக் கூறிக் கொண்டிருக்காமல் மக்களுக்கான சேவையை துரிதமாக ஆற்ற வேண்டும் எனறும் அவர் தெரிவித்தார்.