
அரசாங்க வங்கியொன்றில் பெருந்தொகை மோசடி: விசாரணையில் காத்திருந்த அதிர்ச்சி
தேசிய சேமிப்பு வங்கியில் (NSB) 180 மில்லியன் ரூபாய் மோசடி சம்பவம் தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேமிப்பு வங்கியின்அதிகாரிகள் 180 மில்லியன் ரூபாயை மிக சூட்சுமமாக மோசடி செய்துள்ளதாக கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுரவிடம் சட்டமா அதிபர் நேற்று (30) தெரிவித்துள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடத்திய விரிவான விசாரணையில், வங்கியில் உள்ள பொதுமக்களின் பணத்தில் 180 மில்லியன் ரூபாய் இவ்வாறு தவறாகப் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளதாக சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான சிரேஷ்ட அரசு சட்டத்தரணி ஆஸ்வால்ட் பெரேரா நீதிமன்றத்திற்குத் குறிப்பிட்டுள்ளார்.
அரசுக்குச் சொந்தமான வங்கியின் கடன் வழங்கும் பிரிவில் இந்தப் பெரிய அளவிலான மோசடி நடந்ததாகத் தெரிவித்த அரசு சட்டத்தரணி மோசடி தொடர்பாக வங்கியின் பிரதான கிளையின் கடன் மேலாளராகப் பணியாற்றிய நபர் தற்போது கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடத்திய விசாரணையில், அரசு வங்கியின் மூத்த நிர்வாகக் குழுவும் இந்தப் பெரிய அளவிலான நிதி முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்ததால், அது குறித்தும் விசாரணைகள் நடத்தப்படும் என்றும் அவர் நீதிமன்றத்திற்குத் குறிப்பிட்டுள்ளார்.
போலி ஆவணங்களைத் தயாரித்து கடன்களுக்கு விண்ணப்பிக்கும் ஒரு குழுவிற்கு, சம்பந்தப்பட்ட வங்கியின் சந்தேக நபரான அதிகாரி, லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கடன்களை வழங்க திட்டமிட்டுள்ளதாகவும், அந்தக் கடன்களை அங்கீகரிப்பதற்காக வங்கியில் சிலர் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள லஞ்சங்களை பெற்றிருப்பது ஆச்சரியமாக இருப்பதாகவும் அரசு சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார்.
இதன்படி, நாட்டு மக்களின் பணத்தில் மக்கள் விளையாடுவதை அனுமதிக்க முடியாது என்றும் சந்தேக நபர்களின் பிணை விண்ணப்பங்களை நிராகரித்து, அவர்கள் அனைவரையும் சிறையில் அடைக்குமாறு சட்டத்தரணி நீதிமன்றிடம் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.
இந்த நிலையில், ஐந்து சந்தேக நபர்களையும் அடுத்த மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதிபதி, அந்த திகதிக்குள் சந்தேக நபர்கள் தொடர்பாக கண்டறியப்பட்ட ஆதாரங்கள் குறித்த விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.