தென் கொரியாவுடனான அனைத்து தொடர்புகளையும் நிறுத்துவதாக வட கொரியா அறிவிப்பு!

தென் கொரியாவுடனான அனைத்து தொடர்புகளையும் நிறுத்துவதாக வட கொரியா அறிவிப்பு!

கொரிய தீபகற்பத்தில் பெரும் பதற்றத்திற்குரிய நாடாக திகழ்ந்த வடகொரியா, தென் கொரியாவுடனான அனைத்து தொடர்புகளையும் நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

வட கொரியாவில் இருந்து தப்பித்து சென்றவர்கள் தென் கொரியாவில் இருந்து துண்டு பிரசுரங்கள் அனுப்புவதை அந்நாட்டு அரசு தடுக்கவில்லை என்றால், அனைத்து தொடர்புகளும் நிறுத்தப்படும் என வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன்னின் சகோதரி கிம் யோ ஜோங் கடந்த வாரம் எச்சரித்ததன் பின்னணியில், இந்த தீடிர் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து கொரிய மத்திய செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், ‘வடக்கு-தெற்கு கூட்டு தொடர்பு அலுவலகம் மூலம் பராமரிக்கப்பட்டு வரும் வடக்கு மற்றும் தெற்கின் அதிகாரிகளுக்கிடையேயான தொடர்புகள் ஜூன் 9ஆம் திகதி 12 மணி முதல் நிறுத்தப்பட்டது’ என தெரிவித்துள்ளது.

இதன்படி, இரு தரப்பின் போராளிகளுக்கிடையேயான கிழக்கு மற்றும் மேற்கு கடல் தொடர்பு இணைப்புகள், கொரியாக்கள் இடையேயான சோதனை தொடர்பு பாதை மற்றும் கொரியாவின் தொழிலாளர் கட்சியின் மத்திய குழு மற்றும் தென் கொரியாவின் ஜனாதிபதி இடையே ஒரு அவசர எண் தொடர்பு ஆகியவை துண்டிக்கப்படும்.

தென் கொரியாவை எதிரி என வர்ணித்துள்ள வட கொரியா, அந்த நாட்டுக்கு ஏதிரான தொடர் நடவடிக்கையின் தொடக்கம் இதுவெனவும் தெரிவித்துள்ளது. அத்துடன், வட கொரிய எல்லை நகரான கேசிங்கிற்கு தென் கொரியாவில் இருந்து செய்யப்படும் வழக்கமான தினசரி அழைப்புகளை இன்று முதல் நிறுத்தப்படுகின்றது.

இரு நாடுகளும் தங்களுக்குள் இருக்கும் பதற்றத்தைக் குறைக்க 2018ஆம் ஆண்டில் நடத்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் எல்லையில் அலுவலகத்தை அமைத்தன. 1953ஆம் ஆண்டு கொரிய போர் முடிந்த பிறகு இரு கொரிய நாடுகள் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படாததால், இன்னும் பதற்றம் நீடித்து வருகிறது.

கடந்த ஆண்டு ஹனோய் நகரில் கிம் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இடையே உச்சிமாநாடு தோல்வி அடைந்ததை தொடர்ந்து வடகொரியா பெரும்பாலும் தென்கொரியாவுடனான தொடர்பை துண்டித்துவிட்டது. அணுசக்தி பேச்சுவார்த்தைகளையும் நிறுத்திவிட்டது.