யாழ். உள்ளிட்ட பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு

யாழ். உள்ளிட்ட பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு

யாழ்ப்பாணம் (Jaffna) மற்றும் மன்னார் மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (02.07.2025) வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். உள்ளிட்ட பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு | Sri Lanka Weather Forecast In Tamil

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

சிலாபத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சிலாபத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் காங்கேசந்துறையிலிருந்து முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.