மதத் தலைவர்களுடன் கலந்துரையாட பிரதமர் தீர்மானம்..!
மத ஸ்தலங்களில் வழிபாடுகளை மீண்டும் ஆரம்பிக்க அனுமதி வழங்க வேண்டும் என கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அண்மையில் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக அனைத்து மதத் தலைவர்களையும் சந்திக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.
நாடு இயல்பு நிலைக்கு திரும்புவதால் மக்கள் மீண்டும் தங்கள் வழிபாட்டுத் தலங்கலுக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் என தான் எண்ணுவதாக ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பிரதமர் கூறியுள்ளார்.
“இந்த வாரத்திற்குள் நான் மதத் தலைவர்களைச் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடுவேன். கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையின் வேண்டுகோள் சரியானது. எனவே ஞாயிற்றுக்கிழமை தேவாலய ஆராதனைகள் சில நிபந்தனைகளின் கீழ் மற்றும் வரையறுக்கப்பட்ட பங்கேற்புடன் மீண்டும் தொடங்கப்பட வேண்டும்” என கூறினார்.
நீர்கொழும்பில் செயின்ட் மேரி தேவாலயத்தில் நடைபெற்ற ஞாயிற்றுக்கிழமை ஆராதனையின்போது, கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை இந்த நாட்டு மக்கள் சார்பாக அரசாங்கத்துக்கும் ஜனாதிபதிக்கும் ஒரு சிறப்பு வேண்டுகோள் விடுத்திருந்ததார்.
சுகாதார ஒழுங்குவிதிகளை கடைப்பிடித்து உரிய கட்டுப்பாடுகளுடன் இந்த அனுமதியை தாம்கோருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவலை அடுத்து கத்தோலிக்க தேவாலயங்களின் ஆராதனைகள் யாவும் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் வரையறை கொண்ட அடியார்களின் பங்கேற்றலுடன் சுகாதார ஒழுங்கு விதிகளை கடைப்பிடித்து ஆராதனைகளை நடத்த அனுமதி வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.