பொது தேர்தலின் பெறுபேறுகள் இன்றைய தினம்..

பொது தேர்தலின் பெறுபேறுகள் இன்றைய தினம்..

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 9 ஆவது நாடாளுமன்றத்திற்கு புதிய உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக நேற்று இடம்பெற்ற பொது தேர்தலின் பெறுபேறுகள் இன்றைய தினம் வெளியாகவுள்ளன.

காலை 7 மணி முதல் அந்தந்த மாவட்டங்களில் வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன் இன்றைய தினம் மதியம் 12 மணிக்கு பின்னர் தேர்தல் பெறுபேறுகளை வெளியிட முடியுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கத்தவர்களில் ஒருவரான பேராசிரியர் ரட்ணஜீவன் ஹுல் எமது செய்தி சேவைக்கு குறிப்பிட்டார்.

இதேவேளை வாக்கெண்ணும் நடவடிக்கைகளுக்காக 77 வாக்கெண்ணும் நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

இந்த முறை இடம்பெற்ற பொது தேர்தலில் 71 சதவீதமான வாக்காளர்கள் தமது வாக்குகளை பதிவு செய்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கமைய சுமார் ஒரு கோடியே 10 லட்சம் பேர் வாக்களித்துள்ளதாக அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதில் சுமார் 7 லட்சம் பேர் அஞ்சல்மூலம் தமது வாக்குகளை அளித்துள்ளனர்.

225 நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக நேற்றைய தினம் இடம்பெற்ற பொது தேர்தலில் ஒரு கோடியே 62 லட்சத்து 63 ஆயிரத்து 885 வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக தகுதி பெற்றிருந்தனர்.

22 தேர்தல் மாவட்டங்களை பிரநிதித்துவப்படுத்தி 7 ஆயிரத்து 452 வேட்பாளர்கள் இந்த முறை தேர்தலில் போட்டியிட்டனர்.

அவர்களில் 3 ஆயிரத்து 652 பேர் அங்கீகரிக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளை பிரதிநிதிப்படுத்தி போட்டியிட்டதுடன் 3 ஆயிரத்து 800 பேர் சுயேட்சை குழுக்களில் போட்டியிட்டனர்.

அதேநேரம் நுவரெலிய மாவட்டத்திலேயே இந்த முறை அதிகளவான வாக்காளர்கள் தமது வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.

அந்த மாவட்டத்தில் 75 சதவீதமானார் வாக்களித்துள்ளனர்.

எவ்வாறாயினும் 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 78 வீதமான வாக்களிப்புகள் இடம்பெற்றிருந்தன.

இந்தநிலையில் இந்த முறை புத்தளம் மாவட்டத்திலேயே குறைந்தளவான வாக்கு வீதம் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் அந்த மாவட்டத்தில் 63 சதவீதமானோர் வாக்குகளை அளித்துள்ளனர்.

எனினும் கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் புத்தளம் மாவட்டத்தில் 68 வீதமான வாக்குகள் பதிவாகியிருந்தன.