தேவேந்திர முனை துப்பாக்கிச் சூடு - சந்தேகநபர்கள் இருவர் பொலிஸில் சரண்

தேவேந்திர முனை துப்பாக்கிச் சூடு - சந்தேகநபர்கள் இருவர் பொலிஸில் சரண்

கடந்த மாதம் 21 ஆம் திகதி தேவேந்திர முனை ஸ்ரீ விஷ்ணு தேவாலயத்திற்கு முன்பாக சிங்காசன வீதியில் இரு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நேற்று (07.04.2025) குறித்த சந்தேக நபர்கள் இரு சட்டத்தரணிகளுடன் கந்தர பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களில் ஒருவர் துப்பாக்கிதாரி என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். 

சந்தேக நபர்கள் மனித படுகொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 26 மற்றும் 35 வயதுடைய, கந்தர மற்றும் தேவேந்திர முனைபிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. 

இதேவேளை, ஹிக்கடுவை பொலிஸ் பிரிவின் குமாரகந்த பகுதியில் வீதிக்கு அருகிலுள்ள ஆடையகம் ஒன்றிற்கு அருகில் நின்றிருந்த பெண் ஒருவர் உட்பட இருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


ஹிக்கடுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கினிமெல்லகமஹ பகுதியில் வைத்து சந்தேகநபர் நேற்று (07) கைது செய்யப்பட்டுள்ளார்.


சந்தேக நபர் கோனபீனுவல பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.


கடந்த 3 ஆம் திகதி இரவு, ஹிக்கடுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமாரகந்த பகுதியில் உள்ள வீதிக்கு அருகில் உள்ள ஆடையகம் அருகே நின்று கொண்டிருந்த பெண் உட்பட இருவர் மீது, மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.


இருவரும் படுகாயமடைந்து கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஆண் நபர் உயிரிழந்தார்.