3 மாதங்களுக்குப் பின்னர் வழமைக்குத் திரும்பியது நிவ்யோர்க்

3 மாதங்களுக்குப் பின்னர் வழமைக்குத் திரும்பியது நிவ்யோர்க்

அமெரிக்காவில் கொரோனா தொற்றின் மையமாக விளங்கிய நிவ்யோர்க்கில் 3 மாதங்களுக்குப் பின்னர் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. நிவ்யோர்க் நகரில் கொரோனா வைரஸ் தொற்றின் முதல் பாதிப்பு பதிவாகி நேற்றுடன் 100 நாட்கள் கடந்துள்ள நிலையில், அங்கு கட்டுப்பாடுகள் தளர்வு அமலுக்கு வந்துள்ளது.

இதையடுத்து சுமார் 4 இலட்சம் பேர் நேற்று முதல் வேலைக்கு திரும்பி உள்ளனர். கட்டுமானத்துறை, சில்லரை விற்பனை துறை போன்றவை முதல் கட்டமாக செயற்படத்தொடங்கி உள்ளன. கட்டுமானத்துறையில் முக கவசம் அணிதல், கையுறைகள் அணிதல் ஆகிய விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரையில் கொரோனா தொற்று காரணமாக உலகளவில் 408,734 பேர் உயிரிழந்துள்ளதுடன், 7,199,306 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த கொடிய நோயினால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள அமெரிக்காவில் இதுவரை 113,055 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் அங்கு 2,026,493 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றின் மையமாக நிவ்யோர்க் நகரம் திகழ்கிறது. அமெரிக்காவின் 50 மாகாணங்களில் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 10 ஆயிரத்தை கடந்தது. அதில் நிவ்யோர்க்கில் மட்டுமே 30 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அதேநேரம் நிவ்யோர்க் நகரில் மாத்திரம் 2 இலட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். உலகின் தூங்கா நகரம் என அழைக்கப்படும் நிவ்யோர்க் நகரமும் மாகாணமும் கொரோனா வைரஸ் தொற்று பரவலைத்தடுக்க 3 மாதங்கள் பொது முடக்கத்தின்கீழ் வைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.