புதிய அரசாங்கத்தின் கன்னி வரவு செலவு திட்டம் இன்று

புதிய அரசாங்கத்தின் கன்னி வரவு செலவு திட்டம் இன்று

புதிய  அரசாங்கத்தின் கன்னி வரவு செலவு திட்டம்  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களினால் இன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

 இன்று காலை அமைச்சரவையின் அனுமதியைப் பெற்றதன் பின்னர், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில்  ஜனாதிபதி  காலை 10.30 மணிக்கு வரவு செலவு திட்ட உரையை நாடாளுமன்றில் முன்வைக்கவுள்ளார்.

2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் முதலாம் வாசிப்புக்காக பிரதமர் ஹரிணி அமரசூரியவினால் கடந்த 9 ஆம் திகதி  நாடாளுமன்றத்துக்கு முன்வைக்கப்பட்டிருந்தது.

புதிய வரவு செலவு திட்டத்தில் அரச செலவினம் 2,760 பில்லியன் ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 இந்த முறை வரவு செலவு திட்டத்தினூடாக, இடைநிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி பணிகளுக்கும் கல்வி, சுகாதாரம் மற்றும் நலன்புரி ஆகிய துறைகளுக்கும் அதிகளவான  நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

புதிய அரசாங்கத்தின் கன்னி வரவு செலவு திட்டம் இன்று | New Government S Maiden Budget Today

அரச சேவையாளர்களின் ஊதியம் அதிகரிக்கப்படுவதுடன், தனியார்த்துறையினரின் வேதனத்தை அதிகரித்துக் கொள்ளும் மூலோபாய திட்டங்களும் முன்வைக்கப்படவுள்ளன.

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மீதான விவாதம் நாளை முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன், வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 25 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

 வரவு செலவு திட்டத்தின் மீதான குழுநிலை விவாதம் 27 ஆம் திகதி ஆரம்பமாகி, மார்ச் மாதம் 21 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. வரவு செலவு திட்டத்தின் மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் மார்ச் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.