இனிதே ஆரம்பமானது வாக்குப்பெட்டிகள் அனுப்பிவைக்கும் பணி

இனிதே ஆரம்பமானது வாக்குப்பெட்டிகள் அனுப்பிவைக்கும் பணி

இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்றத்தைத் தெரிவு செய்யும் பொதுத் தேர்தல் நாளை 05ஆம் திகதி புதன்கிழமை நடைபெறவுள்ள நிலையில் வாக்களிப்பு நிலையத்துக்கு வாக்குப்பெட்டிகள் அனுப்பிவைக்கும் பணி இன்று காலை இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குப் பெட்டிகள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மத்திய நிலையத்திலிருந்து இன்று காலை 9.15 மணி முதல் அனுப்பிவைக்கப்பட்டன.

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் 508 வாக்களிப்பு நிலையங்கள் உள்ளன.

இம்முறை தேர்தலில் ஒரு கோடியே 62 இலட்சத்து 63 ஆயிரத்து 885 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் 5 லட்சத்து 34 ஆயிரம் பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

2019 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலுக்கமையவே இம்முறை தேர்தல் நடைபெறவுள்ளதாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கோரோனா பரவலுக்கு மத்தியிலும் நாளை ஓகஸ்ட் 05ஆம் திகதி பொதுத் தேர்தல் நடத்தப்படும் என ஜூன் மாதம் 10ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய அறிவித்திருந்தார்.

இதனையடுத்து பொதுத் தேர்தல் தொடர்பான கூட்டங்களை நடத்துதல், வீடு வீடாகச் செல்லுதல், துண்டறிக்கைகள் விநியோகித்தல், விளம்பர பலகைகளைக் காண்பித்தல், சுவரொட்டிகளைக் காண்பித்தல், தேர்தல் தொடர்பான விளம்பரம் செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் அனைத்திற்கும் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று முதல் ஆரம்பமாகியுள்ள அமைதிக் காலத்தில், எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கைகளிலும் ஈடுபடாது, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்த அனைவரும் ஆதரவளிக்க வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.அதேநேரம், இந்த அறிவித்தலை மீறும் கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள், வேட்பாளர்களுக்கு எதிராக கடுமையாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.