குழந்தை வரம் வேண்டி கோழிங்குஞ்சை விழுங்கிய இளைஞர்; மூடநம்பிக்கையால் பறிபோன உயிர்
உலகம் ஒரு பக்கத்தில் நவீன கண்டுபிடிப்புக்கள் மற்றும் தொழில் நுட்பத்தால் முன்னேறி வளர்ந்துவரும் நிலையில், அங்காங்கே சில மூடப் பழக்கவழக்கங்களையும் மக்கள் பின்பற்றாமல் இல்லை.
அந்தவகையில் , குழந்தை பிறக்கும் என ஜோதிடர் கூறியதை நம்பி உயிருடன் கோழிக்குஞ்சை விழுங்கிய 35 வயது இளைஞர் , மூச்சு குழாய் அடைத்து பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியவின் வடக்கில் சத்தீஸ்கர் மாநிலத்தில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சத்தீஸ்கர் மாநிலம் அம்பிகாபுரம் அருகே சிந்த்காலோ கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த் யாதவ் (வயது 35). திருமணம் ஆனவர். இவருக்கு குழந்தை இல்லை.
குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக கணவன் - மனைவி தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டபோதும் அது பலனிக்கவில்லை. இந்நிலையில் தான் ஆனந்த் யாதவ் தனது வீட்டில் குளித்துவிட்டு இருந்தபோது திடீரென மயங்கினார்.
அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக ஆனந்த் யாதவை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது இறந்த ஆனந்த் யாதவின் தொண்டைப்பகுதியில் உயிருடன் கோழிக்குஞ்சு இருப்பது தெரியவந்தது.
ஆனந்த் யாதவ் தொண்டையில் சுவாசக்குழாய் மற்றும் உணவுப்பாதையை கோழிக்குஞ்சு அடைத்துள்ளது. இதனால் மூச்சுவிட முடியாமல் ஆனந்த் யாதவ் இறந்திருக்கலாம் என்று மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து ஆனந்த் யாதவ் தொண்டையில் கோழிக்குஞ்சு எப்படி சிக்கியது? என்பது பற்றி போலீசார் விசாரணையை தொடங்கினர்.
இந்த விசாரணையின்போது ‛‛ஆனந்த் யாதவுக்கு திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இன்று வரை குழந்தை பிறக்கவில்லை.
குழந்தை வேண்டி ஆனந்த் யாதவ் மாந்திரீகர்கள், ஜோதிடர்களை தொடர்ந்து சந்தித்து வந்தார். அவர்கள் சொன்னது போல் நடந்து கொண்டார். பரிகார பூஜைகளை செய்தார்.
தற்போதும் கூட குழந்தை வரம் கிடைக்க ஜோதிடர் அல்லது மாந்தீரிகர்கள் கூறிய பிறகு தான் அவர் கோழி குஞ்சை விழுங்கியிருப்பார்’’ என வெளியான தகவலால் பொலிஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.