தேர்தல் கடமையில் ஈடுபடவுள்ள பொலிசாருக்கு விசேட அறிவுறுத்தல்கள்!

தேர்தல் கடமையில் ஈடுபடவுள்ள பொலிசாருக்கு விசேட அறிவுறுத்தல்கள்!

சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றி பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுமாறு தேர்தல் கடமையில் ஈடுபடவுள்ள பொலிசாருக்கு யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ அறுவுறுத்தல் வழங்கியுள்ளார்.

தேர்தல் கடமையில் ஈடுபடவுள்ள  பொலிசாருக்கான  தேர்தல் கடமை தொடர்பாக விளக்கமளிக்கும் கூட்டம் யாழ்ப்பாணம் துரையப்பா மைதானத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தேர்தல் விதிமுறை மீறல்களை தடுப்பதோடு மீண்டும் யாழில் கொரோனா தொற்று ஏற்படாவண்ணம் தேர்தல் கடமையில் ஈடுபடவேண்டும்.

எனினும் இம்முறை தேர்தலில் இரண்டு விடயங்களை நாங்கள் கருத்திலெடுக்க வேண்டும்.

அதாவது வாக்களிப்பு நிலையங்களில் தேர்தல் விதிமுறைகளை மீறுவோர் தொடர்பிலும் அதேபோல் மீண்டும் கொரோனா தொற்று ஏற்படாவண்ணம் மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எம்மிடமுள்ளது.

வாக்களிப்பு நிலையங்களில் கடமையில் உள்ள பொலிசார் மூன்று விடயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

வாக்காளர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும்.  கைகள் கழுவி வாக்களிப்பு நிலையத்திற்குள் செல்ல வேண்டும். அத்தோடு சமூக இடைவெளியை பின்பற்றவேண்டும் இதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.

வழமையாக தேர்தல் கடமைகளில் போலல்லாது இம்முறை தேர்தலில் எமக்கு மேலும் ஒரு பொறுப்பு உள்ளது.

அதாவது நாட்டில் மேலும் மீண்டும் கொரோனா தொற்று ஏற்படா வண்ணம் தடுப்பது எமது பாரிய பொறுப்பாகவுள்ளது.

எனவே இம்முறை தேர்தலில் நீங்கள் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடமைகளை சரிவர நிறைவேற்ற வேண்டும்.

எதிர்வரும் 5ஆம் திகதி இடம்பெறவுள்ள தேர்தல் கடமைக்காக யாழ்ப்பாணத்திலுள்ள 15 பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த போலீசார் தேர்தல் கடமையில் ஈடுபடுத்தப்பட வுள்ளார்கள்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.