மூன்றாம் உலகப்போர் ஆரம்பம் : உக்ரைன் இராணுவ அதிகாரியின் அறிவிப்பு
மூன்றாம் உலகப் போர் ஆரம்பித்து விட்டதாக உக்ரைனின் (Ukraine) முன்னாள் இராணுவத் தளபதி வலேரி ஜலுஸ்னி (Valery Zaluzhny) தெரிவித்துள்ளார்.
ரஷ்ய- உக்ரைன் மோதலில் ரஷ்ய சார்பு நாடுகளின்; நேரடி ஈடுபாடு அதனையே குறிக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உக்ரைனில் நிகழ்வு ஒன்றில் பேசிய அவர், 2024 ஆம் ஆண்டில் மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டது என்றும் தாம் அதனை உறுதியாக நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய இராச்சியத்திற்கான உக்ரைனின் தூதராக தற்போது பணியாற்றும் ஜலுஸ்னி, போரின் உலகளாவிய விரிவாக்கத்தில் குறிப்பிடத்தக்க காரணியாக, ரஷ்யாவின் எதேச்சதிகார கூட்டு நாடுகளின் நேரடி ஈடுபாட்டை சுட்டிக்காட்டியுள்ளார்.
வடகொரியாவின் படையினர் மற்றும் ஈரானிய படையினர் உக்ரைனுக்கு எதிரான போரின் பங்கேற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மொஸ்கோ 10,000 வட கொரிய துருப்புக்களை குர்ஸ்க் பிராந்தியத்தில் நிலைநிறுத்தியதாகவும், உக்ரைனுக்கு எதிராக போரில், ஈரானிய ட்ரோன்கள் மற்றும் பிற மேம்பட்ட ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில், உக்ரைன் இந்த போரில் தனியாக வெற்றி பெற முடியுமா என்பதில் தெளிவில்லை என்றும் ஜலுஸ்னி கூறியுள்ளார்