நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அதிகாரி அனுருத்த சம்பாயோவிடம் CID விசாரணை

நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அதிகாரி அனுருத்த சம்பாயோவிடம் CID விசாரணை

கைது செய்யப்பட்டுள்ள நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அதிகாரி அனுருத்த சம்பாயோவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் வாக்குமூலம் பெற்று வருகின்றனர்.

காவல்துறை ஊடகப் பேச்சாளாரும் சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகருமான ஜாலிய சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

பிடியாணை பிறப்பிக்கப்பட்டு 11 நாட்களின் பின்னர் நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அதிகாரி அனுருத்த சம்பாயோ, நீர்கொழும்பு காவல்துறை விசாரணை குழுவில் நேற்று சரணடைந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து அவர் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.

இந்தநிலையிலேயே அவரிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் வாக்குமூலம் பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அவர் உள்ளிட்ட 4 சந்தேகத்திற்குரியவர்கள் போதைப்பொருள் வர்தகர்களுடன் தொடர்பை பேணியுள்ளதாகவும், அவர்களிடம் சட்டவிரோத சொத்துகள் ஏதேனும் உள்ளதாக என்பது தொடர்பிலும் விசாரணை செய்யப்படுவதாக அவர் தெரிவித்தார்.

குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றதன் பின்னர் அவர் இன்று பிற்பகல் நீர்கொழும்பு நீதவானிடம் முன்னிலைப்படுத்தவுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளாரும் சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகருமான ஜாலிய சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

நீர்கொழும்பு சிறைச்சாலையின் கைதிகளுக்கு சலுகைகளை ஏற்படுத்தி கொடுத்தமை தொடர்பில் அவர் உள்ளிட்ட 4 அதிகாரிகள் மீது குற்றம்சாட்டப்பட்டது.

இதற்கமைய அவர்களை கைது செய்யுமாறு நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றால் கடந்த 22 ஆம் திகதி பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

இதற்கமைய பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 3 அதிகாரிகள் இதற்கு முன்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் சரணடைந்துள்ள நிலையில் தற்போது அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.