
இன,மத பேதமின்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டிய காலம் எழுந்துள்ளதாக பிரதமர் தெரிவிப்பு
புதிய அரசாங்கமொன்றை அமைத்து நாட்டை அபிவிருத்தி செய்யும் நோக்கில் நடவடிக்கை எடுப்பதற்கு இன, மத பேதமின்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டிய காலம் எழுந்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் நேற்று மக்கள் சந்திப்புகளில் கலந்துக் கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனை தெரிவித்துளளார்.
நாட்டை கட்டியெழுப்புவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவாக செயற்படுவதற்கான நாடாளுமன்றம் ஒன்றின் அவசியம் தற்போது காணப்படுகிறது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டின் தலைமைத்துவத்தை பொறுப்பேற்ற காரணத்தினால் உலகளாவிய ரீதியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்திய கொவிட்-19 தொற்றை வெற்றிகரமாக இல்லாதொழிப்பதற்கு இலங்கைக்கு சாத்தியமாகியது.
ஐக்கிய தேசிய கட்சி எப்போதும் நாட்டை விற்பனை செய்யும் கொள்கையுடன் செயற்படுகின்றனர்.
கடந்த அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்திய சிலரும் இதற்கு ஒத்துழைப்பு வழங்கியமை கவலைக்குரிய விடயமாகும் எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
இதேவேளை கொவிட்-19 காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் எந்தவித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
காலியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பல நாடுகள் இந்த பிரச்சினையை சிறந்த முறையில் எதிர்நோக்கியுள்ளன.
எனினும் இலங்கையில் அதற்கான எந்தவித தயார்படுத்தல்களும் காணப்படவில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை கொழும்பில் அமைச்சர்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள் அந்த மாவட்ட மக்களுக்கு எந்தவித முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்துரைத்த போதே அவர் இதனை கூறியுள்ளார் கடந்த அரசாங்கத்தின் நிதியமைச்சரும் பிரதமரும் கொழும்பு மாவட்டத்திற்கு எதனையும் செயற்படுத்தவில்லை.
எனினும் எதிர்வரும் காலங்களில் அவ்வாறான செயற்பாடுகளில் மாற்றம் ஏற்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஷ தெரிவித்துள்ளார்.