மாற்றுத் தலைமைக்கு மக்கள் வழங்கவுள்ள ஆணையாக அமையவுள்ள தேர்தல்

மாற்றுத் தலைமைக்கு மக்கள் வழங்கவுள்ள ஆணையாக அமையவுள்ள தேர்தல்

மாற்றுத் தலைமைக்கான மக்கள் ஆணையாக அமையவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் இதுவென தெரிவித்துள்ளார் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்விக்னேஸ் குலரட்ணம்.

கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் பிரதான பஸ்தரிப்பு நிலையத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர்தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்

நடக்க இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தல் 2020 ஆனது தென் பகுதியின் அரசியல் மாற்றத்திற்கான ஆணையாக அமைய இருக்கின்றது என்பது இலங்கை வாழ் மக்கள் அனைவரும் அறிந்த ஒரு விடயம் ஆகும்.

அந்த வகையில் தமிழர்கள் அதிகளவில் செறிந்து வாழும் வடக்கு- கிழக்கு பகுதிகளில் இந்த தேர்தல் மக்கள் தங்களுடைய மாற்றுத் தலைமைக்கான ஆணையை வழங்குகின்ற ஒர் சந்தர்ப்பமாகவே பார்க்கப்படுகின்றது. மிக முக்கியமாக மக்கள் மாற்று தலைமையை எவ்வாறு தேர்ந்தெடுக்கப் போகின்றார்கள்? அந்த மாற்றுத் தலைமை யார்? என்கின்ற கேள்விகளுக்கு பதிலாகவே இந்த தேர்தல் முடிவுகள் அமையப் போகின்றன.

அந்த வகையிலே ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினை பற்றி கூறுவதெனின் எங்களுடைய நீண்ட யதார்த்தமான அரசியல் கொள்கையானது தேசிய நல்லிணக்கத்திற்கூடாக தேசிய அரசியல் நீரோட்டத்திலே இணைந்து ஒர் இணக்க அரசியலை உருவாக்குவதன் மூலம் மக்களினுடைய அரசியல் பிரச்சினைக்கான தீர்வாக இருந்தாலென்ன, தமிழர் பிரதேசத்தினுடைய அபிவிருத்தியாக இருந்தாலென்ன, மக்களினுடைய அன்றாட பிரச்சினைகளாக இருந்தாலென்ன, இவற்றையெல்லாம் தீர்த்துக் கொள்ளலாம் என்கின்ற விடயத்தை பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றோம்.

தற்சமயம் ஏனைய தமிழ்க்கட்சிகளும் இதனை நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏற்றுக் கொண்டிருப்பது இந்த தேர்தலிற்கான அவர்களின் தயார்ப்படுத்தல்களில் அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.

ஆனால் ஏனைய கட்சிகளில் இருந்து ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி எவ்விதமாக வேறுபடுகின்றது என்றால் ஏனையவை இன, மத முரண்பாடுகளை உட்புகுத்தி முரணாண அரசியல் கொள்கைகளை முன்னிறுத்தியே மக்களிடம் வாக்குகளை கேட்கின்றன.

ஆனால் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியானது அதன் 25 வருட கால அரசியல் பயணத்தில் மிக நிதானமாக தேசிய நல்லிணக்கத்தின் மூலமே சாதிக்க முடியும் என்கின்ற நம்பிக்கையினை வலியுறுத்தி வந்துள்ளது. அந்த நம்பிக்கைக்கு ஏற்றவாறு இலங்கையின் மத்தியில் அமைய இருக்கின்ற ராஜபக்ச அரசோடு நேரடியாக பேச்சுவார்த்தைகள் மேற்கொண்டு மக்களுக்கான தீர்வினை பெற்றுத்தரும் வல்லமைமிக்க கட்சியாக இன்று எமது கட்சி பார்க்கப்படுகின்றது.

உண்மையிலே நகைப்புக்குரிய விடயம் என்னவெனில் இந்த தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கின்ற குறிப்பாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகள் தாங்கள் இந்த தேர்தலில் மிகப் பெரும் வெற்றியை பெறப்போவதாகவும் அத்துடன் அரசாங்கத்துடன் இணைந்து தாம் செயற்படப் போவதாகவும் ஒர் மாயையை மக்கள் மத்தியில் உருவாக்கியது மட்டுமல்லாமல் இளைஞர் , யுவதிகளுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கித் தருவதற்கான சூழல் தங்களிடமே இருப்பதாகவும் கூறி தவறான போலி பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றார்கள்.

இதில் சில அரசியல்வாதிகள் மக்களுக்கு காணிகளை பெற்றுத் தருவதாகவும் வீடமைப்பு திட்டங்களுக்கான நிதியுதவிகளை வழங்குவதாகவும் கூறி வெவ்வேறு விதமான போலி வாக்குறுதிகளை அளித்து வருகின்றார்கள்.

மேற்குறிப்பிட்டது போல மத்தியில் அமைய இருக்கும் அரசாங்கத்தோடு இணைந்து செயற்படக்கூடிய வல்லமை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியை தவிர்ந்த வேறெந்த கட்சிக்கும் இல்லை என்பதே வெளிப்படை உண்மையாகும்.

அந்த வகையிலே ஏனைய கட்சிகள் எவ்வாறு அவர்களுடைய போலி வாக்குறுதிகளை நிறைவேற்றப் போகின்றன என்பதில் மக்களாகிய நீங்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.

இந்த இடத்தில் குறிப்பிட வேண்டிய மற்றோர் விடயம் என்னவெனில் தங்களை தமிழ் மக்களினுடைய ஏகபிரதிநிதிகள் எனக் கூறிக் கொண்டு தங்களுக்கென ஓர் அரசியல் நிகழ்ச்சி நிரல் இன்றி அந்நிய சக்திகளினுடைய அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கேற்றவாறு செயற்பட்டு வருகின்ற ஒரு சில கட்சிகளின் பிரதிநிதிகள் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் பால் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாமல் எமது கட்சி மீது சேறு பூசுவதற்காகவும் தேர்தல் பிரச்சார இறுதி காலப்பகுதியிலே பல்வேறு குற்றச்சாட்டுக்களை எம்மீது அரங்கேற்றுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்பதும் அதற்காக சில முகவர்களிடம் பேரங்களை மேற்கொண்டு வருகின்றார்கள் என்பதும் எங்களால் அறிந்து கொள்ள கூடியதாக இருக்கின்றது.

அத்துடன் தற்சமயம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் கூறிய விடயம் பத்திரிகைகளில் பரவலாக வெளிவருகின்றது. அதாவது புதிய அரசியல் யாப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் எனவும் அதில் சர்வதேச சமூகம் ஆர்வத்துடன் இருக்கின்றார்கள் எனவும் அவரால் கூறப்பட்டுள்ளது.

உண்மையிலே இந்த மாதிரி விடயங்களை பார்ப்போமாக இருந்தால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தங்களுடைய இருப்புக்களை தக்க வைப்பதற்காகவும் கடந்த காலங்களில் தாம் விட்ட தவறுகளை மறைத்து இவ்வாறான விடயங்களை முன்வைக்கின்றனர்.

குறிப்பாக சர்வதேச சமூகம் தமிழர்களின் பிரச்சினையில் எவ்வளவு தூரம் ஆர்வமாக இருக்கின்றது என்பது கேள்விக்குரிய ஒன்றாகும். அதுமாத்திரமல்ல சர்வதேச சமூகத்தினுடைய விருப்பத்திற்காக நாங்கள் அரசியல் அமைப்பிலே மாற்றங்களை கொண்டு வருதலோ அல்லது புதிய அரசியல் யாப்பொன்றினை உருவாக்குதலோ தற்சமயம் தேவையற்ற ஒன்றாகும்.

அவ்வாறாக இந்த விடயம் நிகழ்வதாக இருந்தாலும் கூட சுமார் 10 வருடங்களுக்கு மேல் கூட ஆகலாம். ஆனால் எங்களுடைய பிரச்சினை என்னவெனில் தற்பொழுது இருக்கின்ற அரசியல் முறைமைகளைப் பலப்படுத்தி அதற்கூடாக சாதகமான வழியில் தமிழர்களுக்கான சிறந்த அரசியல் தீர்வினை பெற்றுக்கொடுப்பதே ஆகும். ஆகவே அதற்குரிய வழிமுறைகளையே நாம் பின்பற்ற வேண்டும்.

அதுமட்டுமல்லாமல் தமிழர் பிரதேசங்கள் பொருளாதார ரீதியிலே மிகவும் பாதிப்படைந்து காணப்படுகின்றன. அந்த பிரதேசங்களிலே அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கான சூழல் தொடர்பில் ஆராய வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றோம்.

அதனை விடுத்து காலத்தை கடத்துவதற்காகவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு போன்று அரசியல் இருப்புக்களை தக்கவைத்து கொள்வதற்காகவும் மத்தியில் இருக்கும் அரசாங்கம் ஏற்க மறுக்கும் கொள்கைகளை முதன்மைப்படுத்திக் கதைப்பதும் மக்கள் மத்தியிலே இனத்துவேசமான கருத்துக்களை முன்வைத்து வாக்குகளை பெற முயல்வதும் சுயலாப அரசியலின் வெளிப்பாடாகும்.

இக்கட்சிகள் தமது கடந்த காலச் செயற்பாடுகளையும் அதே வழிமுறைகளையும் இந்த தேர்தலிலும் பின்பற்ற நினைக்கிறார்கள் என்பது மிகவும் வருத்தத்திற்குரிய விடயமாக இருக்கின்றது.

ஆனால் எங்களுடைய ஈழமக்கள் ஜனநாயக் கட்சியின் அரசியல்கோணம் முற்றுமுழுதாக வேறுபட்டதாகவும் யாதார்த்தமானதாகவும் இருக்கின்றது என்பதே உண்மையாகும்.

எதிர்காலத்திலே ஏனைய தமிழ் அரசியல் தலைமைகள் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியோடு அணி திரண்டு பயணிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக உருவாக்கப்படும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.