
வட்டுவாகல் ஆற்றினை ஆழப்படுத்தும் நடவடிக்கை தேர்தல் திணைக்களத்தினால் இடைநிறுத்தம்!
முல்லைத்தீவு வட்டுவாகல் ஆற்றினை ஆழப்படுத்தும் நடவடிக்கை ஒன்று இன்று முன்னெடுக்கபட்ட போது முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் திணைக்களத்தினால் தேர்தல் விதிமுறை மீறல் என கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினை தொடர்ந்து அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த வாரம் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடற்தொழிலாளர்கள் மத்தியில் வட்டுவாகல் நந்திக்கடல், தேர்தலுக்கு முன்னர் ஆழப்படுத்தப்படுவதாக மக்களுக்கு வாக்குறுதி வழங்கியதை தொடர்ந்து இன்று ஆழப்படுதலை மேற்கொள்ள கனரக இயந்திரம் வட்டுவாகல் ஆற்றுக்கள் இறக்கப்பட்டு தோண்டப்பட ஆயத்தமாகிய போது உடனடியாக முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் திணைக்களம் சம்பவ இடத்திற்கு வந்து ஆழப்படுத்தும் நடவடிக்கையை மறித்துள்ளது.
இததொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வட்டுவாகல் நந்திக்கடல் ஆற்றுப்பகுதியினை ஆழப்படுத்துமாறு கடற்தொழிலாளர்கள் பல தடவைகள் பல்வேறு தரப்பிடம் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தேர்தல் பிரச்சார நடவடிக்கைக்காக அண்மையில் முல்லைத்தீவுக்கு வருகைதந்தபோது பிரதேச மக்களிடம் கலந்துரையாடி தேர்தலுக்கு முன்னர் ஆழப்படுத்தும் வேலைகளை செய்து தருவதாக வாக்குறுதி வழங்கப்பட்டதன் பொருட்டு இன்று ஆழப்படுத்தும் வேலைகள் முன்னெடுக்கபட்ட நிலையில் தேர்தல் திணைக்களத்தினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது .
இதற்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியபோதும் தேர்தல் காலங்களில் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கதடைசெய்யப்பட்டுள்ளதுடன் தேர்தல் முடிந்து எதிர்வரும் 07 ஆம் திகதிக்கு பின்னர் குறித்த அபிவிருத்தி பணியினை முன்னெடுக்குமாறு முல்ல்லைத்தீவு மாவட்ட தேர்தல் திணைக்கள உதவிப்பணிப்பாளர் க.காந்தீபன் மீனவர்களிடம் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ஆழப்படுத்தும் திட்டம் குறித்த அமைச்சால் ஒழுங்கு படுத்த பட்டிருந்தால் இந்த வேலை திட்டத்தை தேர்தலுக்கு பின்னரும் ஆரம்பிக்க முடியும் எனவே தேர்தல் ஆதாயத்தை நோக்காக கொண்டு இந்த வேலை திட்டம் முன்னெடுக்க படுவதாக தேர்தல் திணைக்களத்துக்கு கிடைத்த குறைபாட்டுக்கு அமைய தேர்தல் சட்ட விதிகளுக்கு அமைய இந்த வேலைகளை தற்போது தடுக்க வேண்டிய கடமை எமக்குள்ளது என மாவட்ட உதவி தேர்தல் ஆணையர் மக்களிடம் கூறியுள்ளார்.
இந்த சம்பவத்தின் போது தேர்தல் திணைக்கள அதிகாரிகள் முறைப்பாட்டு ஆணைக்குழுவினர் பொலிஸார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வருகை தந்திருந்தனர். ஆழப்படுத்துவதற்காக கொண்டுவரபட்ட இயந்திரங்கள் மீண்டும் கொண்டுசெல்லபட்ட நிலையில் இயந்திரங்களுக்கு முன்னால் மீனவர்கள் படுத்து மறியல் நடவடிக்கையில் ஈடுபட்டதால் சிறிது நேரம் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
அத்தோடு குறித்த வேலை திட்டம் இடம்பெற்ற இடத்தில் பிரதேசசபை உறுப்பினர் மற்றும் கட்சியின் இணைப்பாளர்கள் தொண்டர்கள் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.